இழப்பைச் சமாளிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். ஒரு அன்புக்குரியவர் இறந்துவிட்டால் சோகமாக உணர்வது சகஜமானதே.
துக்கம் என்பது எந்த வகையான இழப்புக்கும் ஒரு பதில்வினையாகும். இது ஒரு உலகளாவிய அனுபவமாக இருந்தாலும், அன்புக்குரியவர் உடனான ஒருவரின் உறவு மற்றும் அவருடனான நேசத்தின் பொருள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து, அதற்கான பதில்வினைகள் நபருக்கு நபர் மாறுபடும்.
துக்கத்தை அனுபவிக்கும் போது நீங்களும் உங்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அனுபவிக்கும் சில பொதுவான எதிர்வினைகள் இங்கே உள்ளன.
நடத்தை
மனக்கிளர்ச்சி, பதற்றம், அமைதியின்மை, சோர்வு, அதிகப்படியான செயல்பாடு, தேடுதல், அழுகை, பெருமூச்சு, சமூக விலகல், ஆர்வமிழப்பு, குறைந்த ஆற்றல், இறந்தவரைப் பற்றி கனவுகள் வருவது, இறந்தவருடன் தொடர்புடைய பொருட்கள் உடனான பிணைப்பு/அவற்றைத் தவிர்த்தல்.
உடல் ரீதியான/ உடல் எதிர்வினைகள்
பசியின்மை, தூக்கமின்மை ஆற்றல் இழப்பு, களைப்பு, ‘வெற்று’ வயிறு பற்றிய புகார்கள், இறுக்கமான மார்பு, தொண்டை சுருங்குதல், மூச்சு விட இயலாத நிலை; பார்வை/வாசனை/ஒலிக்கு அதிக உணர்திறன், இறந்தவருக்கு இருந்ததைப் போன்ற உடல்ரீதியான புகார்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்.
எண்ணங்கள்
இறந்தவரின் நினைவோடு மூழ்கியிருத்தல், இறந்தவரின் இருப்பை உணருதல், அவநம்பிக்கை, யதார்த்தமற்ற உணர்வு, நிராதரவு, நம்பிக்கையின்மை, நினைவாற்றல் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம், மறதி மனப்பாங்கு, சீர்குலைந்த எண்ணங்கள்.
உணர்வுகள்
விரக்தி, துயரம், மனப்பதற்றம், பயம், குற்ற உணர்வு, சுய-பழி, கோபம், எரிச்சல், தனிமையுணர்வு, சோகம், ஏக்கம், அதிர்ச்சி, உணர்வின்மை, விமோசனம், துயர் நீங்கல்.
துக்கத்தைச் சமாளித்தல்
- போதுமான அளவுக்கு ஓய்வையும் தூக்கத்தைப் பெறுங்கள்: உங்களால் இரவில் நன்றாகத் தூங்க முடியாவிட்டால், குட்டித் தூக்கம் போடுங்கள், சிறிது நேரம் அமைதியாக இருங்கள், புத்தகத்தைப் படியுங்கள் அல்லது இசையைக் கேளுங்கள்.
- உங்களின் வழக்கமான நடவடிக்கைகளை முடிந்தவரை தொடருங்கள். இந்தத் துக்கக் காலத்தின் போது அவை உங்களை ஆக்கிரமித்து உங்களை ஈடுபாட்டுடன் இருக்க வைக்கும்.
- உங்களைச் சுற்றி அன்புக்குரியவர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இறந்தவர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பகிர்ந்து கொண்ட வேடிக்கையான தருணங்களை எண்ணிச் சிரிப்பதற்குப் பயப்பட வேண்டாம்.
- விரைவாகத் திருத்திக் கொள்வதைத் தவிருங்கள். துக்கத்தைக் கையாள்வதற்கான ஒரு முறையாக மதுபானம் அருந்துவது, அதிகமாக உண்பது அல்லது பிற உதவாத சமாளிக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துவது தூண்டுகோலாக இருக்கலாம். அவை ஒரு குறுகிய காலத்திற்கு உதவுவது போல் தோன்றினாலும், அவை உண்மையில் நீண்ட காலத்திற்கு வாழ்க்கையை மிகவும் கடினமாக்கிவிடும்.
- மற்றவர்களின் ஆதரவை ஏற்றுக்கொள்வதற்கான திறந்த மனதுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.
- ஒரு ஆதரவுக் குழுவில் அல்லது உங்கள் தெய்வ நம்பிக்கையில் ஆறுதல் பெறுங்கள். ஆதரவுக் குழு அமர்வுகளில் கலந்துகொள்வது, அதே சூழ்நிலையில் உள்ள மற்றவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உங்களுக்கு உதவலாம். பிரார்த்தனை மற்றும் தியானம் ஆகியவை நீங்கள் நன்றாக உணர உதவலாம்.
- உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த படைப்பாற்றல், மற்றும் கவிதை எழுதுங்கள் அல்லது ஓவியம் வரையுங்கள். உங்கள் இழப்பை நீங்கள் ஆரோக்கியமான முறையில் சமாளிக்க இயலும்.
- சுயமாக அல்லது ஒரு குழுவுடன் நடவடிக்கைகளில் பங்கேற்றிடுங்கள்.
- உங்கள் நிதி நிலைமையை மீளாய்வு செய்வதற்கான நேரத்தைக் கண்டறியுங்கள். சில பராமரிப்பாளர்களைப் போலவே, நீங்கள் பராமரிப்பு வழங்குவதற்காக ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் மீண்டும் ஊழியர் அணிக்குள் நுழைவது குறித்த நிச்சயமற்ற தன்மையை உணரலாம். இந்த மாற்றத்தில் உங்களுக்கு உதவ சில முனைப்புகள் பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன.
- சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு சிங்கப்பூரர்களுக்கு வேலை தேடுவதற்கும் புதிய வாழ்க்கைத்தொழில் வாய்ப்புகளை ஆராயவும் உதவுகிறது.
- ஸ்கில்ஸ்ஃபியூச்சர் என்பது திறன் தேர்ச்சி மற்றும் வாழ்நாள் கற்றல் மூலம் தங்கள் திறனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை மக்களுக்கு வழங்குவதற்கான ஒரு தேசிய இயக்கமாகும்.
- E2i -இன் வாழ்க்கைத்தொழில் சோதனை என்பது சிங்கப்பூரர்களின் வேலைவாய்ப்பை வலுப்படுத்துவதற்கான வாழ்க்கைத்தொழில் சேவைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இது, ஒரு முதலாளியுடன் குறுகிய காலத்திற்குச் சோதனை முறையில் வேலை செய்வதாகும்.
நிபுணர்களின் உதவியை எப்போது பெற வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
துக்கத்திற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை. பலர் காலப்போக்கில் தங்களைச் சிறப்பாகச் சமாளிப்பதைக் கண்டறிகிறார்கள்.
உங்கள் உடல்நலம், தனிப்பட்ட பராமரிப்பு, அன்றாடச் செயல்பாடு, வேலை அல்லது பள்ளி செயல்பாடுகள் மற்றும் உறவுகள் பாதிக்கப்படும் அளவுக்கு உங்கள் துக்க எதிர்வினைகள் மிகவும் தீவிரமாகவும் அடிக்கடியும் தொடர்ந்தால், நீங்கள் மனச்சோர்வை அனுபவிக்கலாம். இது நிகழும்போது, மருத்துவர், உளவியலாளர் அல்லது ஆலோசகரின் நிபுணத்துவ உதவியை நாடுங்கள்.
உங்கள் மனவுணர்வு சார்ந்த நல்வாழ்வைச் சரிபார்க்க Mindline.sg -இல் உள்ள சுய மதிப்பீட்டுக் கருவியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
எங்கு உதவி நாடுவது
உதவிக்கு உங்கள் அருகிலுள்ள பொது மருத்துவர்கள் அல்லது பலதுறை மருந்தக மருத்துவர்களை அணுகலாம். துக்கம், இழப்பு மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களையும் நீங்கள் தேடிக் கண்டறியலாம். கிடைக்கக்கூடிய சில உதவி மற்றும் வள ஆதாரங்கள் இங்கே உள்ளன:
1. துக்கம், இழப்பு மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் மனநல மருத்துவர்களின் பட்டியல் சிங்கப்பூர் ஆலோசனைச் சங்கத்தின் இணையதளத்தில் உள்ளது.
2. உற்றார் உயிரிழப்பைச் சமாளிப்பது குறித்த சிங்கப்பூர் அந்திமகாலப் பராமரிப்பு மன்றத்தின் ஒருவரின் இறப்புக்குப் பிறகு உங்களை நீங்களே பராமரித்தல்
3. சமூகக் கையறுநிலையை (உற்றார் உயிரிழப்பு) சமாளிப்பதற்கான சேவையை வழங்குபவர்கள்
4. மனநலக் கழகம் வழங்கும் கையறுநிலையை (உற்றார் உயிரிழப்பு) சமாளித்தல்.