அறிவாற்றல் செயல்பாடுகளைப் பாதிக்கும், வீரியமடைக்கூடிய நோய்நிலையான முதுமைக்கால மறதி நோய், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் நடத்தை மாற்றங்களுடன் பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்த நடத்தை மாற்றங்கள் புரிந்துகொள்வதற்கும் நிர்வகிப்பதற்கும் சவாலாக இருக்கலாம், குறிப்பாக அவை எதிர்பாராத விதமாக வெளிப்படும்போது சவாலாக இருக்கலாம்.
சமூக நெறிகள் அல்லது எல்லைகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளுக்கு இது குறிப்பாக பொருந்தும். மற்றும் இது மற்ற நடத்தை மாற்றங்களைப் போலல்லாமல், அதைச் சுற்றியுள்ள சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக சிலருக்கு இதைப்பற்றி பேசுவதற்கு சங்கடமான இருக்கலாம்.
இதை நிவர்த்தி செய்வது சவாலான காரியமாக இருந்தாலும், அடிப்படைக் காரணங்களைப் புரிந்து, தனிநபரை மையமாகக் கொண்ட உத்திகளைப் பயன்படுத்துவது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களும் உங்களைப் போன்ற பராமரிப்பாளர்களும் இரக்கத்துடனும் செயல்திறனுடனும் இந்தச் சிரமங்களைத் தீர்க்க உதவும்.
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளைப் பற்றி மேலும் அறியவும், சாத்தியமான காரணங்கள் மற்றும் தூண்டுதல்களைத் தெரிந்துகொள்ளவும் மற்றும் நிர்வாகத்திற்கான பயனுள்ள உத்திகளைக் கண்டறியவும் தொடர்ந்து படிக்கவும். இந்த ஆழமான கண்ணோட்டங்கள் உங்கள் பராமரிப்புப் பயணத்தில் உங்களை மேலும் வலுவூட்டும் என்று நம்புகிறோம்.
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளைப் புரிந்துகொள்ளுதல்
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகள் ஆனது முடிவெடுப்பது, உந்துவிசைக் கட்டுப்பாடு மற்றும் சமூகப் பொருத்தம் ஆகியவற்றிற்குப் பொறுப்பான மூளைப் பகுதிகள் சேதமடைவதுடன் மிகவும் தொடர்புடையதாக உள்ளது. இந்தச் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நெற்றிப்பக்க மடல் சிதைவடையும்போது இந்த நடத்தைகள் குறிப்பாகத் தெளிவாகத் தெரியும்.
மூளையின் முன்புற மற்றும் பக்கப் பகுதிகளைப் பாதிக்கும் முதுமைக்கால மறதி நோய் போன்ற சில வகையான முதுமைக்கால மறதி நோயில் நடத்தையைக் கட்டுப்படுத்தும் தன்மையை இழப்பது மிகவும் வழக்கமான ஒன்று.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் கட்டுப்படுத்த முடியாத நடத்தைகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படும், மேலும் இது வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ இருக்கலாம்.
Types of Disinhibited Behaviours
1. கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளின் வகைகள்
(அதாவது ஒருவரின் தோற்றத்தைப் பற்றி நயமற்ற கருத்துக்களைச் சொல்வது, அந்தரங்கமான கேள்விகளைக் கேட்பது அல்லது பொருத்தமற்ற கிண்டலில் ஈடுபடுவது.)
2. பொருத்தமற்ற நேரங்களில் அல்லது இடங்களில் ஆடைகளை களைவது.
3. பொது இடங்களில் தங்களின் அந்தரங்கங்களை (அதாவது பிறப்புறுப்பு பகுதிகளைத்) தொடுவது.
4. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, வரிசை மாறிச் செல்வது அல்லது கண்மூடித்தனமாக தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது உள்ளிட்ட தூண்டுதல் நடத்தைகளில் ஈடுபடுவது.
5. கூச்சலிடுவது, சபிப்பது அல்லது மற்றவர்களுடன் உடல் ரீதியாக மோதுவது போன்றவற்றை உள்ளடக்கிய வாய்மொழி மற்றும் உடல் ரீதியான வெளிப்பாடுகள்.
சாத்தியமான காரணங்கள் மற்றும் தூண்டுதல்கள்
பூர்த்திச் செய்யப்படாத தேவைகள்
உடல் ரீதியான அசௌகரியம், பசி அல்லது சமூக தொடர்புக்கான விருப்பம் உள்ளிட்ட பூர்த்திச் செய்யப்படாத தேவைகள், கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளைத் தூண்டுவதில் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இது குறிப்பாக அவர்களின் தேவைகளைத் வெளிப்படுத்துவதில் சிக்கல் உள்ளவர்களிடையே அதிகமுள்ளது.
உதாரணமாக, அவர்கள் வெப்பமாகவோ, அசௌகரியமாகவும் உணர்ந்தால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் தங்கள் ஆடைகளைக் கழற்றி குளிர்வித்துக் கொண்டு, அவர்களின் உடல் அசௌகரியத்தை நிவர்த்திச் செய்யலாம். மேலும், அவர்கள் தங்களின் ஈரமான அல்லது அழுக்கடைந்த டயப்பரால் அசௌகரியமாக உணரும்போது தங்களின் பிறப்புறுப்புகளைத் தொட ஆரம்பிக்கலாம் அல்லது சத்தமாகக் கத்தலாம்.
உடல் ரீதியான தேவைகளைத் தவிர, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு உளவியல் ரீதியான தேவைகளும் உள்ளன, இத்தேவைகள் அவர்களின் நல்வாழ்வைப் பராமரிப்பதற்காக நிவர்த்திச் செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் சிலர், அந்நியர்களிடம் பாலியல் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் அல்லது பாலியல் முன்மொழிவுகளைச் செய்வதன் மூலம் நெருக்கம் மற்றும் அன்பிற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம். தனிநபரை மையமாகக் கொண்ட பராமரிப்பு பற்றிய எங்கள் கட்டுரையில் உளவியல் தேவைகளைப் பற்றி மேலும் படிக்கவும்.
நினைவுத்திறன் இழப்பு
நினைவுத்திறன் இழப்பு என்பது முதுமைக்கால மறதி நோயின் பிற அம்சங்களுக்கு மத்தியில் முக்கிய அம்சமாக உள்ளது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் மக்களையும் இடங்களையும் அடையாளம் காணும் திறனை இழக்க நேரிடலாம் அல்லது குளிப்பது, உடைகளை அணிவது மற்றும் கழற்றுவது மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்துவது போன்ற பழக்கமான பணிகளைச் செய்வது எப்படி என்பதை மறந்துவிடலாம். இது பொது இடத்தில் ஆடைகளைக் களைவது அல்லது சிறுநீர் கழிப்பது போன்ற பொருத்தமற்ற நடத்தைகளுக்கு வழிவகுக்கும். அவர்களுக்குத் தங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றிய குழப்பம் ஏற்படலாம், எடுத்துக்காட்டாக இல்லப் பணிப்பெண்ணை தன்னுடைய மனைவி என்று ஒருவர் தவறாக அடையாளம் காணலாம், இது உதவியாளரிடம் தகாத பாலுறவு வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
மருந்தின் பக்க விளைவுகள்
முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளை நிர்வகிக்க பரிந்துரைக்கப்படும் மருந்துகள் பக்கவிளைவுளை ஏற்படுத்தக்கூடும், இவை முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் அறிவாற்றல் செயல்பாடு, மனநிலை மற்றும் உடல் நலனைப் பாதிக்கலாம். உதாரணமாக, Donepezil மருந்தின் பக்கவிளைவாக தூக்கமின்மையை அனுபவிக்கும் நபருக்கு, அவரது சோர்வு மற்றும் அதிகரித்த எரிச்சல் காரணமாக பொருத்தமான சமூக எல்லைகளைப் கவனிப்பது சவாலாக இருக்கலாம். இது தகாத கருத்துக்களைக் கூறுவது அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பது போன்ற தூண்டுதலான செயல்களுக்கு வழிவகுக்கலாம்.
சுற்றுச்சூழல் காரணிகள்
குறிப்பிட்ட சுற்றுச்சூழல் காரணிகள் கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளைத் தூண்டலாம் அல்லது அதிகரிக்கலாம். உதாரணமாக, கூட்டமான பல்பொருள் அங்காடி நிலையங்கள் அல்லது சமூக ஒன்றுகூடல்கள் போன்ற நெரிசலான, பிரகாசமான மற்றும் இரைச்சலான சூழல்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு உணர்ச்சி வசப்பட வைக்கக்கூடியதாக இருக்கும். இதனைச் சமாளிக்க, அவர்கள் தங்கள் காதுகளை மூடிக்கொண்டு, கத்தலாம் அல்லது உடல் ரீதியான ஆக்ரோஷத்தை வெளிக்காட்டலாம்.
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளுக்கு எதிர்வினையாற்றுதல்
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளுக்கு எதிர்வினையாற்றுவதில், உங்கள் அன்பிற்குரியவரின் உடனடித் தேவைகள் மற்றும் கவலைகளில் கவனம் செலுத்தி குறிப்பிட்ட சம்பவத்தை, அது நிகழும்போது நிவர்த்தி செய்வது உள்ளிட்டவை அடங்கும். அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் உணர்வு ரீதியான நல்வாழ்வை உறுதி செய்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
உங்கள் அணுகுமுறையில் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய கொள்கைகள்:
முடிந்தவரை அமைதியாகவும் நிதானமாககவும் இருங்கள். விரக்தி அல்லது கோபத்துடன் செயல்படுவதைத் தவிருங்கள், ஏனெனில் இது நிலைமையை இன்னும் மோசமாக்கலாம். இதுபோன்ற தருணங்களில், உங்கள் அன்பிற்குரியவரின் நடத்தை அவர்களின் நோய்நிலையின் விளைவாக ஏற்படுகிறது என்பதையும், அது தனிப்பட்ட தாக்குதல் அல்ல என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
சுற்றியிருக்கும் சூழலை அனுமானியுங்கள், நடத்தைக்குப் பங்களிக்கும் சாத்தியமான தூண்டுதல்களை அடையாளம் காணுங்கள். துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய சத்தம், வழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பூர்த்திச் செய்யப்படாத தேவைகள் போன்ற காரணிகள் எதுவும் உள்ளனவா எனப் பாருங்கள்.
நடத்தையைத் தூண்டும் விஷயங்களை நீங்கள் கண்டறிந்ததும், அதை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுங்கள். உதாரணமாக, உரத்த சத்தங்கள் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால், உங்கள் அன்பிற்குரியவரை அமைதியான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது அவர்களின் சூழலில் நிலவும் சத்தத்தின் அளவைக் குறைத்திடுங்கள். மாற்றாக, உங்கள் அன்பிற்குரியவர் பொது இடத்தில் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கினால், அவர்களின் ஆடை அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களுக்கு அசௌகரியத்தை அளிக்கின்றனவா என்பதை அறியுங்கள்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருடைய மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களுடைய பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள். நடத்தை தீங்கு விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தினால், உடனடி அச்சுறுத்தல்கள் விளைவிக்கும் விஷயங்களை அகற்றி பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.
நடத்தையானது உங்கள் அன்பிற்குரியவருக்கு உடனடித் தீங்கு எதையும் விளைவிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துங்கள். உதாரணமாக, உங்கள் அன்பிற்குரியவர் சுற்றியுள்ள யாரேனும் ஒருவரை நோக்கி தகாத நகர்வுகளை மேற்கொண்டால், அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க அவர்களை ஒரு தனிப்பட்ட இடத்திற்குப் அமைதியாக அழைத்துச் செல்லுங்கள். சாத்தியமான இடங்களில், நீங்கள் உறுதியான மற்றும் மரியாதைக்குரிய முறையில் எல்லைகளைத் தெளிவாக அறிவித்திட வேண்டும், மேலும் அவர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள், “அன்புக்கூர்ந்து நிறுத்துங்கள். பிறரின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் அவர்களைத் தொடக்கூடாது”, என்று சொல்லலாம்.
பதட்டமான சூழ்நிலைகளைத் தணிக்க, உன்னிப்பாக கேட்பதையும் அங்கீகரிக்கும் நுட்பங்களையும் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அன்பிற்குரியவருடன் வாதிடுவதற்குப் பதிலாக, அவர்களின் நடத்தை உங்களுக்கு அசாதாரணமானதாகவோ பொருத்தமற்றதாகவோ இருந்தாலும் கூட, அவர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உதாரணமாக, உங்கள் அன்பிற்குரியவர் குடும்ப ஒன்றுக்கூடலின்போது, அங்கு நிலவக்கூடிய சத்தம் மற்றும் செயல்பாட்டினால் உணர்ச்சி வசப்பட்டு, ஆக்ரோஷமடைந்து கத்த ஆரம்பித்தால், நீங்கள், “இங்கே மிகவும் சத்தமாக இருக்கிறதென்று எனக்குத் தெரியும், அமைதியாக இருக்கும் இன்னொரு அறைக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்”, என்று கூறுங்கள்.
தேவைப்பட்டால், தூண்டுதல் அளிக்கும் விஷயங்கள் அல்லது சூழ்நிலையிலிருந்து உங்கள் அன்பிற்குரியவரின் கவனத்தைத் திசைதிருப்ப இதமான திசைதிருப்பல் நுட்பங்களைப் பயன்படுத்துங்கள். இசைக் கேட்பது, கைவினைச் செயல்பாடுகள் அல்லது குடும்பப் புகைப்பட ஆல்பங்களைப் பார்ப்பது போன்ற மனதை அமைதிப்படுத்தும் மற்றும் ஈடுபட வைக்கும் மாற்று நடவடிக்கைகள் அல்லது கவனத்தைத் திசைதிருப்ப வைக்கும் செயல்களில் அவர்களை ஈடுபட வையுங்கள்.
இருப்பினும், அந்த முறையற்ற நடத்தை நீடித்தால், குறிப்பாக அது சுயஇன்பம் போன்ற பாலியல் இயல்புடையதாக இருந்தால், அந்த நபரை மிகவும் தனிப்பட்ட பகுதிக்கு மெதுவாக அழைத்துச் செல்லுங்கள். இது உங்கள் அன்பிற்குரியவரின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பராமரிக்கும் அதே வேளையில் விவேகமான மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையை அனுமதிக்கிறது.
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளை நிர்வகித்தல்
தூண்டுதல்கள் மற்றும் வடிவங்களை அடையாளம் காணுதல்
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளை ஏற்படுத்தக்கூடிய தூண்டுதல்களைக் கவனித்து அடையாளம் காண்பது முக்கியம். இந்தத் தூண்டுதல்கள் குறிப்பிட்ட செயல்பாடுகள், வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், பூர்த்திச் செய்யப்படாத தேவைகள் அல்லது உணர்ச்சி ரீதியான தூண்டுதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்தத் தூண்டுதல்களைப் புரிந்துகொள்வது இத்தகைய முறையற்ற நடத்தைகள் கைமீறி போகக்கூடிய சாத்தியங்களை எதிர்பார்க்கவும் தடுக்கவும் உதவும்.
உதாரணமாக, உங்கள் அன்பிற்குரியவர் பொது இடங்களில் அவர்களின் ஆடைகளை அகற்ற பலமுறை முயற்சித்திருந்தால், உங்கள் அன்புபிற்குரியவரின் ஆடைகள் அவர்களுக்கு ஏற்றவாறு உள்ளனவா எனச் சரிபார்ப்பது பலனளிக்கக்கூடியதாக இருக்கலாம். அவர்களின் ஆடைகள் மிகவும் இறுக்கமாகவோ அசௌகரியமாகவோ உள்ளனவா? வெளியில் இருக்கும் வானிலைக்கு ஆடைகள் அவர்களுக்கு மிகவும் வெப்பமாக இருக்குமா? சிக்கலைக் கண்டறிந்ததும், ஜிப்பர்கள் இல்லாத பேண்ட் போன்ற ஆடை சம்பந்தமான பல தீர்வுகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
நீங்கள் இவற்றை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்வதை அல்லது உங்கள் தொலைபேசியில் இவற்றைக் குறித்துக்கொள்வதை கருத்தில் கொள்ளலாம். இதுபோன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்வினையாற்றல்களை தவறாமல் பதிவு செய்து வைத்துக் கொள்வது, முறையற்ற நடத்தையின் வடிவங்களை நன்றாகப் புரிந்துகொள்ளவும், அத்தகைய நடத்தைகளைத் திறம்பட தணிப்பதற்கான உத்திகளைச் செயல்படுத்தவும் உதவும். ஒரு மாதிரி பதிவு இவ்வாறுதான் இருக்கும்:
தேதி மற்றும் நேரம்: ஜனவரி 15, 2024, காலை 10:30 மணி
நடத்தை குறித்த விளக்கம்: குரலை உயர்த்திப் பேசினார், ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பேசினார் மற்றும் காலை உணவின்போது கிளர்ச்சி அடைந்தார்.
தூண்டுதல்கள் (தெரிந்தால்): வழக்கத்தில் மாற்றம், அவசரப்படுத்தப்படுவதாக உணருதல் எதிர்வினையாற்றல்: ஆறுதல் வார்த்தைகள் கூறப்பட்டது, காலை உணவு வழக்கம் குறித்து இதமான நினைவூட்டல்கள் வழங்கப்பட்டது.
பலன்: அமைதியானார்; மேற்கொண்டு சம்பவம் எதுவும் செய்யாமல் காலை உணவை முடித்தார்.
கட்டமைப்பையும் வழக்கத்தையும் பேணுதல்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவர், அவர்களின் தினசரி வழக்கத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது குழப்பம் அடையலாம்.
வழக்கமான உணவு, மருந்து நேரங்கள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய நிலையான தினசரி வழக்கத்தை அமைத்திடுங்கள். நேரம் மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு உங்கள் அன்பிற்குரியவரை தயார்படுத்த உதவும் வகையில், காலெண்டர்கள் மற்றும் கடிகாரங்கள் போன்ற காட்சிக் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் நிலைத்தன்மையையும் கட்டமைப்பையும் பராமரிப்பதன் மூலம், நீங்கள் அவர்களுக்கு நிதலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்க உதவலாம்.
அர்த்தமுள்ள ஈடுபாட்டை ஊக்குவியுங்கள்
உங்கள் அன்பிற்குரியவரின் ஆர்வங்கள், விருப்பங்கள் மற்றும் திறன்களுடன் ஒத்துப்போகும் செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடச் செய்வது காரணம் மற்றும் இணைப்புக்கான உணர்வை வளர்க்கும். இந்த நடவடிக்கைகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அடையாள உணர்வை வளர்க்கவும், விரக்தியைக் குறைக்கவும், சாதனை மற்றும் உள்ளடக்க உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவுகின்றன என்று ஆராய்ச்சி கூறுகிறது.
அர்த்தமுள்ள செயல்பாடுகள் பற்றி இங்கே மேலும் அறிக.
சாதகமான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குதல்
சத்தம், கவனச்சிதறல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களைக் குறைப்பதன் மூலம் அமைதியான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குங்கள்.
இதில் தொலைக்காட்சி அல்லது வானொலியின் ஒலியைக் குறைப்பது, வெளிப்புற தூண்டுதல்களைக் குறைக்க திரைச்சீலைகளை மூடுவது அல்லது மிகவும் இதமான சூழலை உருவாக்க விளக்குகளை மங்கச் செய்வது உள்ளிட்டவை அடங்கும். நீங்கள் செய்த மாற்றங்களுக்கு உங்கள் அன்பிற்குரியர் என்ன எதிர்வினையாற்றுகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள். தேவைப்பட்டால் கூடுதல் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருங்கள், மேலும் அவர்கள் அச்சூழலை கடக்கையில் ஆதரவையும் ஆறுதலையும் தொடர்ந்து வழங்குங்கள்.
இந்த நடத்தைகள் குளியலறையில் ஏற்படலாம் என்றால், குளியலறையில் பல மேம்பாடுகளைச் செய்வது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம். அதை எப்படிச் செய்யலாம் என்பதை இங்கே அறிந்துகொள்ளுங்கள். அந்த நடத்தைகள் பாலியல் இயல்புடையதாக இருந்தால், நீங்கள் ஒரு பராமரிப்பு நிபுணரையோ அல்லது குடும்பத்தில் அவருடைய பாலினத்தைச் சேர்ந்த வேறு ஒருவரையோ அவரைக் குளிக்க வைக்க உதவுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
இந்த மேம்பாடுகளுடன் சேர்த்து, உங்கள் அன்பிற்குரியவருக்கு அமைதியான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவதற்கு தகவல்தொடர்பும் ஒரு சிறந்த வழியாக உள்ளது. பரிவு, பொறுமை மற்றும் புரிதலுடன் தெளிவாக தொடர்புகொள்வது சிறந்தது. உங்கள் அன்புக்குரியவருடன் எவ்வாறு திறம்பட தொடர்புகொள்வது என்பதை இங்கே அறிந்துகொள்ளுங்கள்.
உதவியை நாடுதல்
கட்டுப்படுத்த முடியாத நடத்தைகள் தொடர்ந்தால் அல்லது அவற்றை நிர்வகிப்பது சவாலானதாக இருந்தால், சுகாதார நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுங்கள். அவர்களால் உங்கள் அன்பிற்குரியவரின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் ஆதரவு மற்றும் சிகிச்சை உத்திகளை வழங்க முடியும்.
தொழில்முறை உதவியைத் தவிர, ஆதரவு மற்றும் உதவிக்காக மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அணுகுவதும் முக்கியம். கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளின் தன்மையைப் பற்றி அவர்களுடன் பேசுவது மற்றும் வெளிப்படையான தகவல்தொடர்பை ஊக்குவிப்பது உங்களுக்கும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவருக்கும் ஆதரவான சூழலை உருவாக்க உதவும். இந்த வெளிப்படையான உரையாடல் புரிந்துணர்வையும் பரிவையும் வளர்க்கிறது, மேலும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது.
ஆதரவைப் பெறுவது பற்றி மேலும் அறிய, சமூகத் தலையீட்டுக் குழுவை (COMIT) தொடர்புகொள்ளுங்கள் அல்லது 6377 0700 என்ற உதவித் தொலைபேசி எண்ணில் டிமென்ஷியா சிங்கப்பூரை அழையுங்கள்.
சுய பராமரிப்பைப் பயிற்சி செய்தல்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவரைப் பராமரிப்பது உங்கள் உணர்ச்சி ரீதியான மற்றும் உடல் நலனைப் பாதிக்கலாம். சுய பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுக்கவும், குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது ஆதரவுக் குழுக்களின் ஆதரவைப் பெறவும் நினைவில் கொள்ளுங்கள். தேவைப்படும்போது ஓய்வு எடுத்துக்கொண்டு, பொழுதுபோக்குகள் அல்லது உங்கள் சொந்த நல்வாழ்வை மேம்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். எல்லாவற்றிலும் சமநிலையைப் பேணுவது மற்றும் பராமரிப்பாளரின் மன அழுத்தத்தை நிர்வகிப்பது நீடித்த பராமரிப்பை வழங்குவதற்கு அவசியம்.
Tell us how we can improve?
Read Next
- Disinhibited behaviours | Dementia Australia
- Managing Disinhibited Behaviour in Dementia.pdf (ntfgh.com.sg)
- Roland, K. P., & Chappell, N. L. (2015). Meaningful activity for persons with dementia. American Journal of Alzheimer’s Disease & Other Dementiasr, 30(6), 559–568. https://doi.org/10.1177/1533317515576389