Playback speed:
வாகனம் ஓட்டுவது ஒரு நபரின் சுயசார்பையும் சுதந்திரத்தையும் குறிக்கலாம். தங்கள் அன்புக்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர் வாகனம் ஓட்டலாமா, வேண்டாமா என்பதுதான் பராமரிப்பாளர்களுக்கு இருக்கும் முதல் கவலையாகும்.
அடிக்கடி வாகனம் ஓட்டுபவர்களுக்கு இது எளிதான மற்றும் தன்னியக்கச் செயலாகத் தோன்றினாலும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது என்பது ஒரு சிக்கலான வேலையாகும், இதற்குப் பின்வருவன போன்ற பலவிதமான அறிவாற்றல் திறன்கள் தேவை,1-4:
• கவனிப்புத் திறன் மற்றும் மனதை ஒருமுகப்படுத்தல்:
சாலையைப் ‘படிக்கின்ற’ வேளையில் வெவ்வேறு ஓட்டுநர் பணிகளில் கவனம் செலுத்துவது மற்றும் அவற்றுக்கு இடையே மாறுவது;
• காட்சி சார்ந்த தகவல்களைத் தொடர்புபடுத்தும் திறன்கள்:
சரியான வேகம், இடைவெளி மற்றும் சாலையின் நிலைப்பாடு ஆகியவற்றைப் பின்பற்றுவது;
• பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திறன்கள்:
சாலையில் ஏற்படும் ஏதேனும் சம்பவங்கள் மற்றும் சவால்களையும், திசைதிருப்பல்கள் அல்லது தடைகளையும் சமாளிப்பது;
• தீர்மானிப்புத் திறன் மற்றும் முடிவெடுத்தல்:
உதாரணமாக, மற்ற ஓட்டுநர்களின் நடத்தைகளைப் புரிந்துகொண்டு தயாராக இருப்பது;
• விரைவான எதிர்செயல் மற்றும் திறன்கள்:
உதாரணமாக, விபத்தைத் தவிர்க்க விரைவாகச் செயல்படுவது; மற்றும்
• நினைவுத்திறன்:
உதாரணமாக, ஒரு வழித்தடத்தை நினைவில் வைத்துக்கொள்வது.3,4
ஒரு நபர் வாகனம் ஓட்டுவதை எப்போது நிறுத்த வேண்டும்?
முதுமைக்கால மறதி நோயைக் கொண்டிருப்பது என்பது எப்போதும் ஒரு நபர் உடனடியாக வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. சிலர் முதுமைக்கால மறதி நோயின் தொடக்கக் கட்டங்களில் உள்ளவர்கள் அல்லது லேசான அறிவுத்திறன் குறைபாடு (Mild Cognitive Impairment, MCI) உள்ளவர்கள் இன்னமும் வாகனம் ஓட்டுகிறார்கள்.5
எனினும், முதுமைக்கால மறதி நோய் என்பது ஒரு நபரின் அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளைப் பாதிக்கின்ற, படிப்படியாக ஏற்படும் நிலையாகும். இது படிப்படியாக உங்களின் மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பை பாதிக்கலாம் மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் உங்களின் திறனையும் பாதிக்கலாம். நீங்களும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் நீங்கள் பாதுகாப்பற்ற வாகனம் ஓட்டுவதற்கான அடையாளங்களைக் கண்டால், நீங்கள் இனி வாகனம் ஓட்டுவது சாத்தியமில்லை, நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதற்கான அறிகுறிகள்
- உங்களுக்கு நன்கு தெரிந்த இடங்களுக்குப் பரிச்சயமான வழித்தடங்களில் செல்லும்போது தொலைந்து போவது
- பாதையில் சீராகச் செல்லாமல் இருப்பது (பாதைகளுக்கு இடையே சறுக்கி மாறுவது)
- பிரேக் மற்றும் கேஸ் பெடல்களுக்கு இடையே குழும்புவது
- போக்குவரத்து அடையாளக் குறியீடுகளைக் கவனிக்கத் தவறுவது
- போக்குவரத்தில் மெதுவான அல்லது மோசமான முடிவுகளை எடுப்பது
- சாலையோர வரிசைக் கற்கள் மீது மோதுவது அல்லது மனதளவில் குழப்பமடைந்து ஒரே இடத்தைச் சுற்றி வருவது
- சாலையில் மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் இருப்பது அல்லது அதிவேகமாக வாகனம் ஓட்டுவது
- சாலையில் செல்லும் போது எளிதாகவும், அடிக்கடியும் கோபமடைவது அல்லது குழப்பமடைவது
- சிறிய விபத்துக்களில் ஈடுபடுவது அல்லது விபத்திலிருந்து நூலிழையில் தப்புவது
- அதிக போக்குவரத்து அபராதங்களைப் பெறுவது
வாகனம் ஓட்டுவதை நிறுத்த முடிவுசெய்வது கடினமான முடிவாகும், ஆனால் அது உங்கள் சுயசார்பு மற்றும் சுதந்திரத்தின் முடிவைக் குறிப்பதில்லை.
உங்கள் பாதுகாப்பிற்காகவும், சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும், உங்கள் மருத்துவர் மற்றும் அன்புக்குரியவர்களிடம் உங்கள் நிலையைப் பற்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பது முக்கியமாகும். உங்கள் உரிமத்தை வைத்திருப்பதற்காக உங்கள் மருத்துவரிடம் தகவல்களை மறைக்காதீர்கள், ஏனெனில் இது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.1
மாற்றுப் போக்குவரத்து விருப்பத்தேர்வுகளைத் தேடவும்
புதிய, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஏற்பாட்டை உருவாக்கவும்
உங்களால் இன்னமும் வாகனம் ஓட்ட முடியும் என்றால், உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் மருத்துவரிடம் பேசி, நீங்கள் சாலையில் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட அனுமதிக்கும் புதிய ஏற்பாட்டைச் செய்துகொள்ளவும்.
நோயறிதலுக்குப் பிறகு வாகனம் ஓட்டுதல்
ஆதாரம்: ஆல்சைமர்ஸ் WA
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்கின்ற டாம் அவர்களைச் சுதந்திரமாக வாகனம் ஓட்ட அனுமதிக்கின்ற, அதே நேரத்தில் அவரது மற்றும் சாலையில் உள்ள மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற ஒரு புதிய ஓட்டுநர் ஏற்பாட்டை அவரும் அவரது குடும்பத்தினரும் செய்துகொள்கின்ற பயணத்தை இந்தக் காணொளி காண்பிக்கிறது.
பொறுப்புநிலைகளை மாற்றிக் கொள்ளவும் - பயணி இருக்கையில் அமரவும்
ஓட்டுநர் இருக்கையில் இருந்து பயணிகள் இருக்கைக்கு மாறுவதை மிகவும் சகிப்புத்தன்மை கொண்டதாக மாற்ற, சிங்கப்பூரில் ஒரு பராமரிப்பாளர் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்ட தனது அன்புக்குரியவருடன் எவ்வாறு இணைந்து செயல்பட்டார் என்பதற்கான உதாரணம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
ஸ்டீவன் & லாய் குவெனின் கதை
58 வயதில் இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்ட தனது கணவர் ஸ்டீவனுக்கு லாய் குவென் அவர்கள் தான் முதன்மைப் பராமரிப்பாளராக உள்ளார். ஸ்டீவன் தனது முதுமைக்கால மறதி நோயின் லேசான கட்டத்தில், தனது நோயறிதலுக்குப் பிறகும் சுயசார்புடனும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்ட முடிந்தது. எனினும், அவருக்கு 64 வயதாக இருந்தபோது, அவர் காரை ஓட்டும் வேளையிலும், நிறுத்துமிடத்தில் நிறுத்தும் போதும் அவரது இடஞ்சார்ந்த விழிப்புணர்வு மற்றும் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை லாய் குவென் கவனித்தார். லாய் குவென் ஓட்டுநர் இருக்கையில் இருந்த சமயங்களில் கூட, காருக்கு மிக அருகாமையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களைத் தவிர்க்கச் சொல்வது போன்ற ஸ்டீவனின் அறிவுறுத்தல்கள், சாலையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதுடன் ஒத்துப் பார்க்கவில்லை என்பதை அவர் கவனித்திருந்தார். இது ஸ்டீவன் வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக நிறுத்துவதே நல்லது என்ற முடிவுக்கு லாய் குவென் இட்டுச் சென்றது. இந்த முடிவு பின்னர் அவரது மருத்துவரால் சரியென ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஓட்டுநர் இருக்கையில் இருந்து பயணி இருக்கைக்கு மாறுவது இருவருக்குமே கடினமான ஒன்றாக இருந்தது. தான் எப்போதும் செய்யக்கூடிய ஒரு வேலையைத் தான்னால் இனி செய்ய முடியாது என்பதால் ஸ்டீவன் விரக்தியடைந்தார். அதே நேரத்தில், லாய் குவென் மன உளைச்சலுக்கு ஆளானார், ஏனெனில் அவர் ஸ்டீவனின் விரக்தியை சமாளித்து, அவரது ஓட்டுநர் இருக்கையில் அமருவதற்கு முன் ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. 6 மாத காலத்திற்குப் பிறகு, ஸ்டீவன் பயணியாகத் தனது புதிய நிரந்தரப் பொறுப்புநிலையை ஏற்றுக்கொண்டார்.
இப்போது, இந்த ஏற்பாடு பின்வருமாறு இருந்தது:
• லாய் குவென் இருக்கும் போது, அவர் ஸ்டீவனை பயணி இருக்கையில் அமர வைத்துக்கொண்டு காரை ஓட்டுகிறார். ஒரு இயல்பான உரையாடலாளரான ஸ்டீவன் தனது வழித்தடங்களை இன்னும் நன்கு அறிந்திருப்பதால் கவனமாகச் செல்ல வேண்டிய இடங்களைப் பற்றி லாய் குவெனுக்குத் தெரிவிக்கிறார். சிங்கப்பூரைச் சுற்றியுள்ள அடையாளக் குறியீடுகள் மற்றும் பகுதிகள் பற்றிய அவரது நினைவுத்திறன் இன்னும் அப்படியே இருப்பதால் லாய் குவென் இதை ஊக்குவிக்கிறார்.
• எனினும், அவர் வாகனம் ஓட்டும்போது பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுரைகளை அவருக்குக் கொடுக்கும் பழக்கத்தை ஸ்டீவன் கொண்டிருக்கிறார். இதற்குத் தடைபோட, லாய் குவென் அவர் சொல்வதைக் கேட்பதாக தலையசைக்கிறார், அவரது அறிவுறுத்தல்கள் பொருத்தமானதாக இருந்தால் அவற்றுக்குச் செவிசாய்க்கிறார் அல்லது அவர்களைச் சுற்றியுள்ள சூழலைப் பற்றி உரையாடலில் அவரை ஈடுபடுத்துகிறார்.
மொத்தத்தில், லாய் குவென் கார் சாவியைத் தன்னிடம் வைத்திருந்தாலும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் செயல்பாட்டில் ஸ்டீவனை ஈடுபடுத்த தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்.
பொதுப் போக்குவரத்து
நல்வாய்ப்பாக, சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து அமைப்பு உலகிலேயே சிறந்ததாக உள்ளது. பல்வேறு போக்குவரத்து முறைகளான டாக்சி, தனியார் வாடகைக் கார், பெருவிரைவு இரயில் மற்றும்/அல்லது பேருந்து மூலம் சிங்கப்பூரைச் சுற்றிலும் நீங்கள் எளிதாகப் பயணம் செல்லலாம்.
உங்கள் நிலைமாற்றத்திற்கு உதவ, உங்களுக்கு வாகனம் ஓட்டும் திறன் இருக்கும் போதே நீங்கள் பொதுப் போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்தத் தொடங்கலாம். உதாரணமாக, மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு உங்கள் அக்கம்பக்கத்திற்குச் செல்ல, சமூக நிலையத்திற்குச் செல்ல அல்லது வணிக மையத்திற்குச் செல்ல நீங்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.
படிக்கவும்: முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கான நடைமுறை சார்ந்த பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்.
GrabAssist (கிராப்அசிஸ்ட்)
GrabAssist என்பது Grab நிறுவனத்தின் ஒரு போக்குவரத்து விருப்பத்தேர்வாகும், இது மூத்தோர்கள் மற்றும் உடற்குறையுள்ள நபர்களுக்குக் கூடுதல் உதவியை வழங்குகிறது.
இந்தப் போக்குவரத்து விருப்பத்தேர்வின் கீழ், நடமாடுவதில் குறைபாடுகளைக் கொண்ட பயணிகளுக்கு உதவ ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு நபரைச் சக்கர நாற்காலியில் இருந்து கார் இருக்கைக்கு பாதுகாப்பாக மாற்றுவதற்கு அவர்களால் உதவ முடியும்.
கூடுதலாக, GrabAssist Plus என்பது Grab நிறுவனத்தின் மற்றொரு போக்குவரத்து விருப்பத்தேர்வாகும், இச்சேவை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிடைக்கிறது. இந்த விருப்பத்தேர்வின் கீழ், பயணிகள் தங்கள் சக்கர நாற்காலிகளில் இருந்து இறங்காமல் பயணிக்கலாம், ஏனெனில் இந்த விருப்பத்தேர்வில் உள்ள வாகனங்கள் சரிவுப்பாதை அணுகலைக் கொண்டிருக்கின்றன. Grab செயலியில் ஒரு சவாரிரை முன்பதிவு செய்யும் போது, ’மதிப்பு-கூட்டப்பட்ட’ தாவலைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் இந்தச் சேவையை அணுகலாம்.
Tell us how we can improve?
- UBC eHealth Strategy Office. (2011). Getting to know dementia: A patient’s guide to diagnosis, treatment, and care. https://www.fraserhealth.ca/-/media/Project/FraserHealth/FraserHealth/Health-Topics/Mental-Health-Substance-Use/Getting_to_know_dementia_a_patient_guide_to_diagnosis_treatment_and_care.pdf?la=en&hash=11C5366B58CAB0628DC4979E9E91976F1EBBF615
- Dementia Australia. (n.d.). Dementia and driving. https://www.dementia.org.au/resources/dementia-and-driving
- Alzheimer’s Society. (n.d.). Driving and Dementia. https://www.alzheimers.org.uk/get-support/staying-independent/driving-dementia
- Alzheimer’s Society. (2020). Driving and dementia. https://www.alzheimers.org.uk/sites/default/files/2018-10/439LP%20Driving%20and%20dementia.pdf
- Alzheimer Scotland. (2016). Driving and dementia. https://www.eddn.org.uk/wp-content/uploads/2018/01/Driving-and-Dementia.pdf
- Mayo Clinic. (2019, July 3). Alzheimer’s and dementia: When to stop driving. https://newsnetwork.mayoclinic.org/discussion/alzheimers-and-dementia-when-to-stop-driving/.
- Alzheimer’s Association. (n.d.). Dementia and driving. https://www.alz.org/help-support/caregiving/safety/dementia-driving