முதுமைக்கால மறதி நோயுடன் சுயசார்புடன் வாழ்வதில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
நீங்கள் தனியாகக் தங்கியிருந்து, தற்போது ஆரம்ப நிலை முதுமைக்கால மறதி நோய் அல்லது லேசான அறிவாற்றல் குறைபாட்டுடன் (Mild Cognitive Impairment, MCI) வாழ்பவராக இருந்தால், உங்களின் சுயசார்பை முடிந்த காலம் வரை பராமரிப்பதற்கான மாற்றங்களைச் சமாளிப்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.
அன்றாட பணிகளை எளிதாக்குங்கள்
வழக்கமான தினசரி வழக்கத்தைக் கொண்டிருங்கள்
ஒரு வழக்கமான வழக்கத்தை உருவாக்கவும், இது ஒரு நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்வதை எளிதாக்குகிறது. அன்புக்குரியவரைச் சந்திப்பது மற்றும் மனம் மகிழ்வதற்கு வெளியே செல்வது போன்ற பல்வேறு வகையான நடவடிக்கைகளை சில நாட்களில் மேற்கொள்வதற்கு நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இந்த நடவடிக்கைகள் உங்கள் நாட்கள் மிகவும் அர்த்தமுள்ளதாகவும், ஈடுபாட்டுடனும் இருக்க உதவும், மேலும் நீங்கள் வெறுமனே இருப்பதை அல்லது உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
உங்கள் நாளை ஒழுங்கமைக்கவும்
உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் கதவு போன்ற நீங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இடத்தில் ஒரு நாள்காட்டியை அல்லது குறிப்பேட்டை வைக்கவும். இந்த நாள்காட்டியில், உங்களின் பின்வரும் விஷயங்களைப் பின்தொடர நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்:
• அன்றைய தினம் செய்ய வேண்டியவற்றின் பட்டியல்
• மருத்துவ நியமன சந்திப்புகள், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடனான சந்திப்பு.
• பணிகள் மற்றும் நியமன சந்திப்புகளை நீங்கள் நிறைவு செய்த உடன் அவற்றை அழித்துவிடவும். ஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்கள் நாள்காட்டியில் உள்ள தேதியை அழித்துவிடுங்கள், ஏனெனில் இது அடுத்த நாள் நீங்கள் எழுந்திருக்கும் போது அன்றைய தேதியை உறுதியாக அறிந்துகொள்ள உதவுகிறது.
• உங்கள் அன்றாட நடவடிக்கைகளைப் பதிவு செய்ய நீங்கள் ஒரு நாட்குறிப்பையும் வைத்துக் கொள்ளலாம்.
• நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைக் குறிக்க சில வாக்கியங்களை எழுதலாம், புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் (உணவு ரசீதுகள், மளிகைப் பட்டியல்கள் மற்றும் ரசீதுகள், திரைப்பட நுழைவுச்சீட்டுகள் போன்றவை) ஒட்டி வைக்கலாம். அன்றைய தினத்திற்கான உங்கள் உணர்வுகளையும் நீங்கள் எழுதலாம்.
• அவ்வப்போது, நீங்கள் முன்பு செய்ததை அல்லது உணர்ந்ததை உங்களுக்கு நினைவூட்ட, இந்த நாட்குறிப்பைத் திரும்பிப் பார்க்கலாம்.
விவரச்சீட்டுகள் மற்றும் குறிப்புகளைப் பயன்படுத்தவும்
உள்ளே சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டிக்கொள்ள, உங்கள் அலமாரிகள் மீது விவரச்சீட்டுகளை ஒட்டலாம். நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது உங்கள் சாவி மற்றும் பணப்பையை கொண்டு செல்ல உங்களுக்கு நினைவூட்ட, உங்கள் பிரதான கதவில் குறிப்புகளையும் ஒட்டி வைக்கலாம்.
கட்டணங்களைச் செலுத்துவதை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது
பணம் செலுத்தத் தவறுவதைத் தவிர்க்க, உங்கள் பில்லிங் நிறுவனங்களுக்கான (பயன்பாட்டு வழங்குநர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலியன) கட்டணங்களைச் செலுத்துவதற்கு GIRO ஏற்பாடுகளை அமைக்கலாம் . நீங்கள் இணையம்வழி வங்கிப் பரிவர்த்தனை மூலம் GIRO ஏற்பாடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பில்லிங் நிறுவனங்களின் GIRO விண்ணப்பப் படிவங்களுக்காக அவர்களை அழைப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வங்கிக் கணக்கு மற்றும் GIRO நிலையான அறிவுறுத்தலை நீங்கள் மறந்துவிடலாம் என்று கவலைப்பட்டால், அவ்வப்போது அதை உங்களுக்கு நினைவூட்டுமாறு ஒரு நம்பகமான நபரிடம் கேட்கலாம்.
• நீங்கள் வங்கியைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால், நீங்கள் வழக்கமாக தினமும் பார்க்கும் இடத்தில் வங்கியின் நேரடித் தொலைப்பேசி எண்ணை எழுது வைக்கலாம்.
• மாற்றாக, உங்கள் கட்டணங்களைச் செலுத்த உங்களுக்கு உதவுமாறு நீங்கள் நம்பும் ஒருவரிடம் கேட்கலாம். இந்த நபரால் உங்கள் நிதிநிலை அறிக்கைகளை மீளாய்வு செய்து, ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவும் உதவலாம்.
மருந்துகளை எவ்வாறு நிர்வகிப்பது
மருந்தளவுகளை ஒழுங்கமைக்கவும் நேரத் திட்டமிடவும் உங்களுக்கு உதவும் பல தயாரிப்புகள் உள்ளன. இந்தத் தயாரிப்புகளில் வாராந்திர மாத்திரைப் பெட்டிகள் மற்றும் அலாரம் கடிகாரத்துடன் கூடிய மின்னணு மாத்திரைப் பெட்டிகள் ஆகியவை அடங்கும். இந்தப் பெட்டிகளை மருந்தகங்கள் அல்லது ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம். மாற்றாக, உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் நினைவூட்டல்களை உருவாக்கலாம்.
உங்கள் வீடு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்
உங்கள் வீட்டில் சிறிய மாற்றங்களைச் செய்வது, முதுமைக்கால மறதி நோயுடன் நீங்கள் தொடர்ந்து சுதந்திரமாக வாழ்வதற்கு பாதுகாப்பான மற்றும் எளிமையான சூழலை உருவாக்க உதவும். எடுத்துக்காட்டுக்கு:
அதிகத் திறந்தவெளிகளை உருவாக்குங்கள்
உங்கள் வீட்டில் உள்ள தேவையற்ற ஆடைகள், உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் போன்ற பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றவும். உங்கள் சமையலறை மற்றும் குளியலறை(களுக்கு) செல்லும் தாழ்வாரங்கள் போன்ற பொதுவான இடங்களுக்கான பாதைகள் நேரடியாகவும் தடைகள் இல்லாமல் இருப்பதாகவும் இருக்க வேண்டும்.
கீழே விழும் அபாயத்தைக் குறைப்பதற்கு, பொருட்களை அகற்றவும்
வழுக்கி விடுவதைத் தடுக்க, தரைவிரிப்புகள் மற்றும் விரிப்புகளை அகற்றவும் அல்லது சுருட்டி வைக்கவும். கால் இடறி கீழே விழுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்கு, நடைபாதைகளில் இருந்து மின் வடங்கள் மற்றும் கம்பிகளை அகற்றவும் அல்லது அவை (சுவர்களில் அல்லது ஒரு மூலையில்) சேர்த்துக் கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். கீழே விழுவது காயம் மற்றும் உடற்குறையை ஏற்படுத்தலாம், மேலும் தனியாக வாழ்வதைச் சிரமமாக்கலாம் அல்லது சவாலானதாக மாற்றலாம்.
வெளிச்சத்தை அதிகரியுங்கள்
உங்கள் வாழறை, படுக்கையறைகள், கழிப்பறைகள் மற்றும்/அல்லது நடைவழிகளில் இரவு விளக்குகளை நிறுவவும். போதுமான வெளிச்சமானது, நீங்கள் இரவில் நன்றாகப் பார்க்கவும் பாதுகாப்பாக நடமாடவும் உதவும். மின்விளக்குகளின் சுவிட்சுகளின் மீது ஒளிரும் நாடாவை ஒட்டுவதன் மூலம் உங்களால் அவற்றை எளிதாகக் கண்டறிய முடியும். இது உங்களால் செய்ய முடியும் மற்றொரு செலவு குறைவான, ஆனால் பயனுள்ள நிறுவலாகும்.
தானாக அணைக்கப்படும் அடுப்பைப் பயன்படுத்துங்கள்
எரிவாயு அடுப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, டிஜிட்டல் டைமரைக் கொண்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் கேஸ் ஹாபை நிறுவுவதைக் கருத்தில் கொள்ளுங்கள், இது முன்-அமைக்கப்பட்ட நேரம் நேரம் முடிந்த பிறகு தானாகவே எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும். பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட கேஸ் ஹாப் குறித்து த ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில் வெளிவந்துள்ள செய்திக் கட்டுரையைப் படிக்கவும்.
உங்கள் எரிவாயு அடுப்பை அணைக்க மறந்துவிட்டு, அது தொடர்ந்து இயங்குவது மிகவும் ஆபத்தானது. அடுப்பு தொடர்ந்து இயங்கிய பிறகு அது சுற்றுச்சூழலுக்கு மிக எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவை வெளியேற்றினால், ஒரு தீப்பொறி எளிதில் எரிவாயுவைத் தீப்பற்ற வைத்து வீட்டில் தீயை ஏற்படுத்தும்.
மாற்றாக, மின்சார அடுப்பு அல்லது இண்டக்ஷன் குக்கரைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள், அது அதன் மேற்பரப்பில் பாத்திரங்களைக் கண்டறியாதபோது தானாகவே அணைந்துவிடும்.
இல்லத் தீ அலாரச் சாதனத்தை (Home Fire Alarm Device, HFAD) நிறுவுங்கள்
உங்கள் வீட்டில் இல்லத் தீ அலாரச் சாதனம் (HFAD) இல்லாவிட்டால், அதையும் நீங்கள் நிறுவலாம். HFAD ஆனது வீட்டிற்குள் கவனிக்கப்படாத சமையல் அல்லது மின்சாரத் தீயினால் ஏற்படும் தீ அல்லது வெள்ளைப் புகையைக் கண்டறிந்து, குடியிருப்பவரை எச்சரிக்க அலாரத்தை ஒலிக்கும். வீட்டில் தீ பற்றியிருப்பதை ஒருவருக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டால், அவரால் சிறிய தீயை அணைக்க முடியும் அல்லது 995-ஐ அழைத்துத் தப்பிக்க முடியும். HFAD பற்றி மேலும் கண்டறியுங்கள்.
HFADகளை வழங்கும் சில்லறை விற்பனையாளர்களின் பட்டியலை SCDF-இன் இணையதளத்தில் கண்டறியுங்கள்.
பிற பாதுகாப்பு சாதனங்களை நிறுவுங்கள்
ஜிபிஎஸ் டிராக்கர்கள், அவசரகால விழிப்பூட்டல் பொத்தான்கள் மற்றும் கீழே விழுவதைக் கண்காணிக்கின்ற சாதனங்கள் ஆகியவை நீங்கள் கருத்தில் கொள்ள விரும்புக்கூடிய பிற பாதுகாப்பு சாதனங்களாகும். சரியான சாதனத்தை வாங்கி உங்களுக்காக அமைக்க உதவுமாறு குடும்பத்தினர் அல்லது நண்பரிடம் கேளுங்கள். இந்தச் சாதனங்கள் பற்றி மேலும் கண்டறியுங்கள்.
360° விர்ச்சுவல் ரியாலிட்டி முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த HDB வீட்டு வடிவமைப்பு வழிகாட்டி
முதுமைக்கால மறதி நோயுடன் தொடர்ந்து சார்பின்றி வாழ்வதற்கு, உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் உங்கள் வீட்டை எவ்வாறு மாற்றுவது என்பதை அறிய, சமீபத்திய 360° விர்ச்சுவல் ரியாலிட்டி முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த HDB வீட்டு வடிவமைப்பு வழிகாட்டியை பார்க்கவும்.
உங்கள் CARA உறுப்பினர் அட்டையை எடுத்துச் செல்லுங்கள்
நீங்கள் தொலைந்துவிட்டால் அல்லது உதவி தேவைப்பட்டால் CARA உறுப்பினர் அட்டை மிகவும் உதவியாக இருக்கும். இது முன்னாள் தேசிய சமூகச் சேவை மன்றத்தின் (NCSS) பாதுகாப்பாகத் திரும்புவதற்கான அட்டைக்குப் பதிலாக இப்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது. CARA உறுப்பினர் அட்டையில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பதிவு செய்யப்பட்ட நபருக்குத் தனித்துவமான ஒரு QR குறியீடு உள்ளது. நீங்கள் தொலைந்து போனால், பொதுமக்கள் இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து, படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் விழிப்பூட்டலைச் செய்யலாம். படிவத்தைச் சமர்ப்பித்தவுடன், உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பருக்குத் தகவல் தெரிவித்து, நீங்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவ முடியும்.
CARA பற்றி மேலும் கண்டறியுங்கள்.
உங்கள் ஆதரவு அமைப்பு உருவாக்குங்கள்
நீங்கள் நம்பக்கூடிய நபர்களை அடையாளம் காணவும்
நீங்கள் நம்பக்கூடிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களை உங்கள் அவசரகாலத் தொடர்புகளாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் தொலைபேசி எண்களை ஒரு காகிதத்தில் எழுதி உங்கள் வீட்டுத் தொலைபேசியின் அருகில் ஒட்டி வைக்கவும் அல்லது அவர்களின் எண்களை உங்கள் கைப்பேசியில் சேமித்து வைக்கவும். உங்கள் வேக அழைப்புத் தொடர்புகளில் அவர்களின் எண்களை உள்ளிடுவதற்குக் கருதுங்கள்.
உங்களுக்குக் கண்டறியப்பட்ட நோயைப் பற்றி நீங்கள் நம்பக்கூடிய அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
நல்ல அண்டைவீட்டார்களால் குடும்பத்தினரைப் போல இருக்க முடியும், அவர்கள் உங்களுக்கு மிக அருகாமையில் வாழ்பவர்கள். உங்களுக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பதை அவர்கள் அறிந்திருந்தால், நீங்கள் தொலைந்து போகும் போது அல்லது உதவி தேவைப்படும்போது அவர்கள் கவனித்து, உங்களுக்கு ஆதரவளிக்க முடியும்.
உங்களின் திட்டமிடப்பட்ட மருத்துவ நியமன சந்திப்புகளில் கலந்துகொள்ளுங்கள்
உங்கள் முதுமைக்கால மறதி நோய் நிலையை மேற்பார்வையிடும் உங்கள் மருத்துவர் உடனான மருத்துவ நியமன சந்திப்புகளைத் தவிர்க்காதீர்கள்.
• உங்கள் மருத்துவர் உங்கள் முதுமைக்கால மறதி நோயுடன் தொடர்புடைய மாற்றங்களைப் பின்தொடர்ந்து கண்காணிக்கலாம், மேலும் உங்களின் சிறந்த நலனைக் கருத்தில் கொள்கின்ற ஒரு பராமரிப்புத் திட்டத்தை உருவாக்கி கண்காணிக்கலாம்.
• உங்களுக்கு கூடுதல் பராமரிப்புச் சேவைகள் (மருந்து மேலாண்மைச் சேவைகள், மருத்துவத் துணைச் சேவைகள், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கான உதவி போன்றவை) தேவைப்பட்டால் அல்லது சமூகத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உங்களுக்குப் பயனளிக்கும் பட்சத்தில் உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைகளை வழங்க முடியும்.
ஆதரவுக் குழுக்களில் இணையுங்கள்
டிமென்ஷியா சிங்கப்பூர் ஆனது முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்குப் பல சேவைகளையும் திட்டங்களையும் கொண்டுள்ளது. மேலும் அறிய, டிமென்ஷியா சிங்கப்பூரின் உதவித் தொலைபேசிச் சேவையை 6377 0700 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது இணையதளத்தை பார்க்கவும். ஒத்த கருத்துடைய நபர்களுடன் இணைவது மற்றும் அவர்களிடமிருந்து உணர்ச்சி மற்றும் சமூக ரீதியான ஆதரவைப் பெறுவது உங்கள் முதுமைக்கால மறதி நோய் பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்வதில் உங்களுக்கு பலத்தை அளிக்கலாம்.
உங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்
முதுமைக்கால மறதி நோயுடன் சார்பின்றி வாழ்வது ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதையும் உள்ளடக்கியது. உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவை உட்கொள்வது, போதுமான தூக்கம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவை முதுமைக்கால மறதி நோய் வளர்ச்சியை மெதுவாக்க உதவுகின்றன.
- உடற்பயிற்சிகள்
- ஆரோக்கியமான உணவுச் செய்முறைகள்
- நன்றாகத் தூங்குங்கள் – ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
- சமூக நடவடிக்கைகள் – உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள், அவர்களைப் பார்க்கச் சென்று உரையாடுங்கள். நீங்கள் ஒரு டிமென்ஷியா சிங்கப்பூர் திட்டத்திலும் சேரலாம்.
உங்கள் முதுமைக்கால மறதி நோய் மிதமான மற்றும் முற்றிய கட்டங்களுக்கு முன்னேறும்போது, மாற்று வாழ்க்கை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், ஏனென்றால் நீங்கள் சுயசார்புடன் வாழ்வது இனி உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது.
மாற்று வாழ்க்கை ஏற்பாடுகள் பற்றிய இந்தக் கலந்தாலோசனையில் உங்கள் அன்புக்குரியவர்களை (குடும்பத்தினர் மற்றும்/ அல்லது நண்பர்கள்) சேர்ப்பது முக்கியமாகும், இதன் மூலம் நீங்கள் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். உங்கள் முதுமைக்கால மறதி நோய் பயணத்தில் முடிந்தவரை முன்னதாக இந்தக் கலந்தாலோசனைகளை நீங்கள் தொடங்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் என்ன பேசலாம் என்பதைப் பற்றி மேலும் கண்டறியுங்கள்: நிதி மற்றும் சட்ட ஆதரவு
தொடர்புடைய வளஆதாரங்கள்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கான தெளிவான நாள்காட்டி
இந்த நாள்காட்டியானது, முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தின் தேதி/நாள் மற்றும் பிற சிறப்புத் தருணங்களுக்குத் தங்களுக்குத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொள்ளவும், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், மருந்து எடுத்துக்கொள்வது மற்றும் நியமன சந்திப்புகள் உள்ளிட்ட அவர்களின் பணிகளைப் பின்தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் சுய-பராமரிப்புப் பொறுப்புநிலைகளில் சுயசார்பைப் பராமரிக்கவும் அதிகாரமளிக்க உருவாக்கப்பட்டதாகும். நாள்காட்டியை எவ்வாறு இணைப்பது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டிக்குக் காணொளியைப் பார்க்கவும்.
Tell us how we can improve?
- National Institute on Aging. (2019, November 12). Tips for living alone with early-stage dementia. https://www.nia.nih.gov/health/tips-living-alone-early-stage-dementia
- Alzheimer’s Society. (n.d.). Staying independent. https://www.alzheimers.org.uk/get-support/staying-independent
- Alzheimer’s Society. (2017). The memory handbook: A practical guide to living with memory problems. https://www.alzheimers.org.uk/sites/default/files/pdf/the_memory_handbook.pdf