Playback speed:
உங்கள் அன்பிற்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவரைப் பராமரிக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து குடும்பமாக ஒன்றுக்கூடி விவாதிப்பது மிகவும் உதவியாக இருக்கும். முதுமைக்கால மறதி நோயைச் சுற்றியுள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பது தவறு என்று சில குடும்பங்கள் நினைக்கலாம், ஆனால் குடும்ப விவாதம் என்பது உங்கள் அன்பிற்குரியவரின் விருப்பங்களையும் தெரிவுகளையும் மதிப்பது என்பதில் குடும்ப உறுப்பினர்கள் தெளிவாக இருப்பது முக்கியம்.
நோய்க்கண்டறியப்பட்டிருப்பதை வெவ்வேறு குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு விதமாக சமாளிப்பார்கள், மேலும் அவர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அவர்களுடைய பாணியில் தெரிவிப்பார்கள். சில சமயங்களில், இது குடும்பத்திற்குள் தற்செயலான பூசலுக்கு வழிவகுக்கும். பின்வரும் பராமரிப்பு விஷயங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்:
- வழங்கப்படும் பராமரிப்பின் விதம்
- நிதிப் பொறுப்புகள்
- பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் பங்கு
- வேலையை நிர்வகிப்பது, தனிநபர் பொறுப்புகள் மற்றும் அன்பிற்குரியவரைக் கவனித்துக்கொள்வதில் சிரமங்கள்
- பராமரிப்புப் பயணத்தில் வரக்கூடிய உணர்வுகள்
- குடும்பம் அல்லது உறவுசார்ந்த அடிப்படை பிரச்சனைகள்
இந்தச் சிக்கல்களைக் கண்டறிந்து திறன்மிக்க வகையில் நிர்வகிப்பது முக்கியம். அவற்றுக்காக ஆயத்தமாவதன் மூலம் பராமரிப்பின் மூலம் வரும் மன அழுத்தங்களையும் அயர்வுகளையும் குறைக்கலாம், மேலும் இந்தச் செயல்பாட்டில், குடும்ப உறவுகளையும் குடும்பம் இயங்கும் விதத்தையும் மேம்படுத்தி வலுப்படுத்தலாம்.
உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பராமரித்துக்கொள்வது குறித்து பயனுள்ள விவாதங்களை நடத்த சில அடிப்படை விதிகளை அமைத்திடுங்கள்:
- உங்கள் அன்பிற்குரியவரின் தேவைகளையும் விருப்பங்களையும் விவாதத்தின் மையமாகக் கொள்ளுங்கள். அவர்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் விருப்பங்களைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற, நீங்கள் கூடிய விரைவில் மேம்பட்ட பராமரிப்புத் திட்டமைப்பு (Advance Care Planning, ACP) மேற்கொள்வதைப் பரிசீலிக்கலாம். மேம்பட்ட பராமரிப்புத் திட்டமைப்பு (ACP) பற்றி மேலும் அறிக.
- உங்கள் அன்பிற்குரியவரின் கவனிப்பு மற்றும் பல்வேறு பராமரிப்புப் பொறுப்புகள் தொடர்பாக வழக்கமான சந்திப்புகள் மற்றும் விவாதங்களை மேற்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். பராமரிப்புத் தேவைகள் காலப்போக்கில் மாறலாம்.
- வட்டமேசை விவாதத்தை நடத்துங்கள், இதன் மூலம் ஒவ்வொருவரும் பேசுவதற்கும் தங்கள் கவலைகளைத் தெரிவிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஒவ்வொருவரும் மற்றவர்களின் கருத்துக்களையும் தேவைகளையும் மதித்திடுங்கள். விஷயங்களை எல்லா கண்ணோட்டங்களில் இருந்தும் பார்க்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொருவருக்கும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய தனிப்பட்ட பொறுப்புகள் உள்ளன – எ.கா. குழந்தைகள், வேலை, மனைவி, நிதி போன்ற பிற பொறுப்புகள் உள்ளன
- அடுத்ததற்குச் செல்வதற்கு முன் ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
- குடும்பத்தினர் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வர நீங்கள் எந்த முறையைப் பயன்படுத்தலாம் என்று கருத்தில் கொள்ளுங்கள் – எ.கா. பெரும்பான்மை வாக்களிப்பு, மருத்துவரின் கருத்தைப் பெறுதல் போன்றவை
- வெளிப்படையாக விவாதியுங்கள் மற்றும் கையில் உள்ள முன்னுரிமைகளுக்கு ஏற்ப உங்கள் கண்ணோட்டத்தை மாற்றியமையுங்கள்.
கூட்டத்தில் யாரெல்லாம் கலந்துகொள்ள வேண்டும்?
உங்களது குடும்பம் பெரியதாக இருந்தால், சில உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல்கள் இருக்கக்கூடும். அவ்வாறான சூழலில், சில உறுப்பினர்களால் கலந்து கொள்ள முடிகிறதோ இல்லையோ, குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அதில் கலந்துகொள்வது முக்கியம். இது குடும்பத்திலுள்ள மூத்த உறவினராகவோ கட்டணங்களைச் செலுத்தும் நபராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமா என்பது பின்வருவனவற்றைப் பொறுத்தது:
- உங்கள் அன்பிற்குரியவர் போதுமான அளவு தெளிவாகச் சிந்தித்து, அவரது விருப்பங்களை வெளிப்படுத்த முடியுமா?
- விவாதத்தில் கலந்துகொள்வது அவருக்குச் சௌகரியமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
- உங்கள் அன்பிற்குரியவர் கூட்டத்தில் கலந்துகொண்டால் குடும்பத்தினரால் வெளிப்படையாக பேச முடியுமா?
நிகழ்ச்சி நிரலை அமைத்தல்
ஒவ்வொரு தனிநபரின் ஆழமான உணர்வுகளையும் கருத்துக்களையும் பிரதிபலிக்கும் ஒரு கூட்டத்தில், நிலைமையைக் கருத்தில் கொள்ள முன்வைப்பது குடும்பத்தின் முக்கியப் பிரச்சினையில் கவனம் செலுத்த உதவுகிறது. இதைப் பின்வருமாறு செய்யலாம்:
- நடக்கும் விஷயங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நிலைமையை விளக்கலாம். இவ்வளவு காலம் நீங்கள்தான் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் பேசிக் கொண்டிருந்தால், உங்களுக்குத் தெரிந்ததை கூட்டத்தில் விளக்குவதற்கு நீங்கள் சிறந்த நபராக இருக்கலாம்.
- ஒவ்வொரு சுகாதார விருப்பத்தேர்வுக்கும் (option) அதற்கான செலவுகளையும் முன்வைக்கலாம்.
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் சார்பாக குடும்பத்தில் உள்ள ஒருவரை முடிவெடுப்பவராக நியமிக்கலாம்.
- உங்கள் அன்பிற்குரியவருக்கு ஏற்கனவே ஒரு பராமரிப்பாளர் இருந்தால் அல்லது வெளிநாட்டு இல்லப் பணியாளர் ஒருவர் பராமரித்து வந்தால், உங்கள் அன்பிற்குரியவரின் புதிய மற்றும் அதிகரித்து வரும் தேவைகளைப் பராமரிக்கும் திறன் பராமரிப்பாளருக்கு இருக்கிறதா என்பதை குடும்பத்தினர் மதிப்பீடு செய்ய வேண்டும்.
யார் என்ன செய்வது என்பதை முடிவு செய்தல்
முடிவெடுப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வழி, உங்கள் அன்புக்குரியவரால் சுயமாக முடிவெடுக்க இயலும் பட்சத்தில், ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்படி அவரிடம் நீங்கள் கேட்கலாம். முடிவெடுப்பவர் நியமிக்கப்படவில்லை என்றால், குடும்பத்தினர் அனைவரும் சௌகரியமாக கருதக்கூடிய முடிவெடுப்பவரைப் பரிந்துரைக்க வேண்டும்.
பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதில் தாங்கள் ஆற்றக்கூடிய பங்கைக் கண்டறிய அனைவருக்கும் இந்தக் கூட்டம் ஒரு நல்ல நேரமாக இருக்கும். நாங்கள் பரிந்துரைக்கும் சில முக்கிய பொருப்பாளர்கள் பின்வருமாறு:
முதன்மைப் பராமரிப்பாளர்
இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருடன் அதிக நேரம் இருக்கும் மற்றும் அவரைப் பராமரிக்கும் நபர் ஆகும்.
நிதிநிலைகள்
குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பராமரிப்புச் செலவுகளை ஏற்கலாம், அதே சமயம் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தங்களால் இயன்றவரை பங்களிப்புச் செய்யலாம்.
போக்குவரத்து
வாகனங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள், அந்த நபரை மருத்துவச் சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்லவும், திரும்ப அழைத்து வரவும் உதவலாம்; குடும்பத்திடம் கார் இல்லையென்றால் அல்லது அதை பயன்படுத்த வேண்டாம் என விரும்பினால், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்குப் போக்குவரத்து ஏற்பாடு செய்யும் பொறுப்பை குடும்ப உறுப்பினர் ஒருவர் ஏற்கலாம்.
முதன்மைப் பராமரிப்பாளருக்கு ஆதரவு அளித்தல்
முதன்மைப் பராமரிப்பாளருக்கு ஓய்வு அல்லது கூடுதல் உதவி தேவைப்பட்டாலோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தாலோ, சில குடும்ப உறுப்பினர்கள் பராமரிப்பைத் தொடர்ந்து வழங்க முன்வரலாம்.
சுகாதார நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
முக்கியப் பராமரிப்பாளரால் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், முக்கியமான உடல்நலப் பாதுகாப்புத் தகவலைத் தொடர்புகொண்டு தெரிவிக்கக்கூடிய ஒருவர்.
குடும்பத்தில் கலந்துகொள்ளும் கூட்டம் சுகாதார நிலையத்தில்தான் நடக்க வேண்டுமா?
சில குடும்பங்கள் மருத்துவமனையில் கூட்டத்தை நடத்த விரும்பலாம், ஏனெனில் அவர்களுக்கு கேள்வி இருந்தால், நேரடியாக சுகாதார நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க முடியும். ஆலோசகர்கள் மற்றும் மருத்துவச் சமூகப் பணியாளர்கள் போன்ற பராமரிப்பு நிபுணர்களும் தங்கள் அன்பிற்குரியவருக்கு பயனளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு ஒரு குடும்பத்தை வழிநடத்த உதவும் வகையில் பயிற்சி பெற்றிருப்பார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளைக் கொண்டுள்ளன. கலந்துரையாடலை நடத்துவதற்கான கூடுதல் ஆலோசனைகளை வழங்க நீங்கள் விரும்பும் நிறுவனத்தில் உள்ள மருத்துவ சமூக சேவையாளரிடமோ சுகாதார நிபுணரிடமோ நீங்கள் கேட்கலாம். சுகாதார நிலையத்துக்கு வெளியே உள்ள குடும்ப சேவை நிலையத்தையும் நீங்கள் அணுகலாம்.
குடும்பக் கூட்டத்தை நடத்துவது குறித்த உதவிக்குறிப்புகளை அறிக.
குடும்பத்தினரை ஈடுபாட்டுடன் வைத்திருங்கள்
கலந்துரையாடலுக்குப் பிறகு, குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க வேண்டும். மக்கள் ஒருவரையொருவர் விரைவாகத் தொடர்புகொள்வதை சமூக ஊடகங்கள் எளிதாக்கியுள்ளன, மேலும் அன்பிற்குரியவரின் நிலை குறித்த அண்மைத் தகவல்களை சரியான நேரத்தில் குடும்பத்தினருக்கு அனுப்ப WhatsApp போன்ற செய்திப் பரிமாற்ற செயலிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பராமரிப்பாளருக்குத் தங்கள் ஆதரவைக் காட்டிட இது ஒரு சிறந்த வழியாகவும் உள்ளது.
பராமரிப்பாளருக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவை வழங்குவது, அன்றாடக் கடமைகளுக்குக் கைகொடுப்பதைப் போலவே சக்திவாய்ந்ததாக இருக்கும்.
குடும்பக் கூட்டத்தை நடத்துவது குறித்த உதவிக்குறிப்புகளை அறிக.