Playback speed:
முதுமைக்கால மறதி நோய் நடத்தை மாற்றங்களுடன் ஏற்படுகறது, இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவர் மற்றும் அவரைச் சுற்றியுள்ள உங்கள் அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நடத்தை மாற்றங்கள் முதுமைக்கால மறதி நோயினுடைய அம்சங்களில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் இவற்றை அடையாளம் காண்பது மிகவும் கடினம். நடத்தை மாற்றங்களுடன் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் பெரும்பாலும் அவர்களின் “பழைய இயல்பான சுயப்பண்பிலிருந்து” “முற்றிலும் வேறுபட்ட ஆளுமை” கொண்டவர்களாக இருப்பார்கள். முதுமைக்கால மறதி நோயின் இலேசான மற்றும் மிதமான கட்டங்களின் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு நடத்தை மாற்றங்கள் நிகழ்கின்றன, மேலும் இவை நபருக்கேற்பவும் பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோயினாலும் வித்தியாசப்படுகின்றன.
இவை முதுமைக்கால மறதி நோயின் இலேசான, மிதமான மற்றும் முற்றிய கட்டங்களில் உள்ளவர்களால் வெளிப்படுத்தப்படும் சில பொதுவான நடத்தைகளாகும், இவை நபருக்கு நபர் மாறுபடும்:
நிமிட வாசிப்பு
⇒ விஷயங்களை மறந்துவிடுவது
⇒ எப்போதாவது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது
⇒ மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது
⇒ எப்போதும் சோர்வாக உணர்வது
⇒ எளிதில் எரிச்சல் அடைவது
மிதமான முதுமைக்கால மறதி நோய்
⇒ பரிச்சயமான இடங்களில் தொலைந்து போவது
⇒ சொல்லப்பட்ட விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது
⇒ தகவல்தொடர்பில் சிக்கல்களை எதிர்கொள்வது
⇒ தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுயப் பராமரிப்பை புறக்கணிப்பது
⇒ நேரத்தையும் நிகழ்வுகளையும் இழப்பது
⇒ அடிக்கடி பொருட்களை வேறொரு இடத்தில் வைப்பது
⇒ நடத்தைத் தொந்தரவுகளை அனுபவிப்பது
⇒ பொதுவான பொருள்கள் மற்றும் பழக்கமானவர்களின் பெயர்களை மறந்துவிடுவது
⇒ குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற முக்கியமான நிகழ்வுகளை மறந்துவிடுவது
⇒ நேரம் மற்றும் இடங்கள் குறித்து குழப்பமடைவது
⇒ மோசமான அல்லது குறைந்தளவில் முடிவெடுப்பது
⇒ சுருக்கவிவர சிந்தனையில் சிக்கல்களை எதிர்கொள்வது
⇒ விழுங்குவதில் பிரச்சினைகளை அனுபவிப்பது
முற்றிய முதுமைக்கால மறதி நோய்
⇒ அன்றாட பணிகளைச் செய்வதற்கான நடமாட்டம் மற்றும் இயலுந்திறனை இழப்பது
⇒ தகவல்தொடர்பு கொள்ளும் திறனை இழப்பது
⇒ உணவு உண்ண மறுப்பது
⇒ விழுங்குவதில் பிரச்சினைகளை அனுபவிப்பது
சில நேரங்களில், முதுமைக்கால மறதி நோயின் இலேசான மற்றும் மிதமான கட்டங்களின் போதான நடத்தை மாற்றங்கள் கவலையை ஏற்படுத்தும். பொதுவாகக் காணப்படும் கவலைக்குரிய நடத்தைகளின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
எளிதில் வருத்தமடைவது
எளிதில் எரிச்சல் அடைவது
வாக்குவாதத்தில் ஈடுபடுவது
பொருத்தமில்லாமல் அலறுவது அல்லது அழுவது
குளிக்க அல்லது அழகுபடுத்திக் கொள்ள மறுப்பது
வீட்டை விட்டு ஓடுவது
முறையற்ற நடத்தையைக் கட்டுப்படுத்த இயலாமல் போவது
பாலியல் ரீதியாக பொருத்தமின்றி நடந்துக் கொள்வது
சமூக ரீதியாக பொருத்தமின்றி நடந்துக் கொள்வது
பொருட்களை அப்புறப்படுத்துவதில் சிரமங்களைக் கொண்டிருப்பது
வழக்கமற்ற இரவு நேர நடவடிக்கையில் (சூரிய அஸ்தமன நடவடிக்கையில்) ஈடுபடுவது
இரவில் விழித்துக்கொள்வது
சில நடத்தைகளைத் திரும்ப திரும்ப செய்வது
சூரிய அஸ்தமன நடவடிக்கையைக் கொண்டிருப்பது
பதட்டமடைவது அல்லது அதிகப்படியாக கவலைப்படுவது
அக்கறையின்றி அல்லது அலட்சியமாக இருப்பது
மாய உணர்வுகள் மற்றும்/அல்லது பிரமைகளைக் கொண்டிருப்பது
மனச்சோர்வுடன் இருப்பது
பழக்கமானவர்களைத் தவறாக அடையாளம் காண்பது
சொந்தக் கதைகள்
என்னுடைய பாட்டி என்ன சொல்ல வந்தார்கள்
இந்த வீடியோவில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்ந்து மறைந்த பாட்டியைப் பராமரித்த மருத்துவர் சென் ஷிலிங், பல சோதனை அத்தியாயங்கள் மூலம் அவரது பாட்டி எதைத் தெரியப்படுத்த முயன்றார் என்பதையும், தவறான குற்றச்சாட்டுகள், அலைந்துத் திரிதல் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட அவரது பாட்டியின் நடத்தை மாற்றங்களையும் புரிந்து கொள்ள எப்படி கற்றுக்கொண்டார் என்று கூறுகிறார்.
மருத்துவர் சென் ஷிலிங் கூ டெக் புவாட் மருத்துவமனையில் தங்கிப் பணிபுரியும் மருத்துவராக உள்ளார். இவரை முதுமைக்கால மறதி நோயைக் கொண்டிருந்த அவரது பாட்டி வளர்த்தார்.
ஆதாரம்: LIEN அறநிறுவனம், கூ டெக் புவாட் மருத்துவமனை, டிமென்ஷியா சிங்கப்பூர் வழங்கும் எங்களை மறந்துவிடாதீர்கள் முனைப்புத் திட்டம் (ForgetUsNot Initiative)
எனது பணம் எங்கே?
குற்றச்சாட்டுகள், வாக்குவாதங்கள் மற்றும் பதற்றத்தை உள்ளடக்கிய அத்தியாயங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அயர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. துரதிர்ஷ்டவசமாக, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் உள்ள வீடுகளில் இந்தச் சூழ்நிலைகள் பொதுவாக நிலவுகின்றன. இந்த வீடியோவில், லில்லி தனது மாமியார் வேறு இடத்தில் மாற்றி வைக்கும் பணத்தை அவரால் எப்போதும் ‘கண்டுபிடிக்க’ முடிகின்ற அவரது இரகசியத்தைக் கூறுகிறார்.
லில்லி பாங், பராமரிப்புச் சேவையான ஹோமேஜ் உடைய பராமரிப்பாளராகவும் இணை நிறுவனராகவும் உள்ளார். அவர் மாமியார் டான் முய் ஹுவா எதிர்கொள்ளும் அறிகுறிகள் மற்றும் நடத்தை மாற்றங்களைச் சமாளிக்க அவர் குடும்பத்திற்கு உதவி வருகிறார்.
ஆதாரம்: LIEN அறநிறுவனம், கூ டெக் புவாட் மருத்துவமனை, டிமென்ஷியா சிங்கப்பூர் வழங்கும் எங்களை மறந்துவிடாதீர்கள் முனைப்புத் திட்டம் (ForgetUsNot Initiative)
நடத்தை மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவர் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் உள்ளன. இருப்பினும், முதுமைக்கால மறதி நோய் ஆனது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் பேச்சு உள்ளிட்ட அனைத்து மனம் சார்ந்த செயல்பாடுகளையும், தன்னார்வ நடத்தைகளையும் கட்டுப்படுத்தும் மூளையைப் பாதிக்கிறது, முதுமைக்கால மறதி நோய் முற்றிப் போவது, உங்கள் அன்பிற்குரியவர் அவரது தேவைகளை அடையாளம் காணவும், அவற்றை எவ்வாறு பூர்த்திச் செய்வது அல்லது அவற்றை எப்படித் தெரியப்படுத்துவது போன்றவற்றை அறிய முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர, மூளையில் ஏற்படும் மாற்றங்களாலும் நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெளிப்படுத்தப்படும் நடத்தை மாற்றத்தின் வகை, நபருக்கு முதுமைக்கால மறதி நோயை ஏற்படுத்தும் மருத்துவ நிலையால் பாதிக்கப்படும் மூளையின் பகுதிகளைப் பொறுத்திருக்கும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவரின் கண்ணோட்டத்தில் இருந்துப் பார்த்து இந்த நடத்தைகளைப் புரிந்துகொள்வதும் முக்கியமானது. அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதது, தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவர்கள் முயற்சி செய்வது அல்லது தங்களைச் சுற்றியுள்ள நபர்களுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்வது போன்றவற்றின் விளைவாக அவர்கள் இந்த நடத்தைகளை வெளிப்படுத்தலாம்
நடத்தை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் பூர்த்திச் செய்யப்படாத தேவைகளை பொதுவாக பின்வரும் நான்கு காரணிகளாக வகைப்படுத்தலாம்:
1. உடல் சார்ந்த தேவைகள்: முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவர் வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கலாம், அதே நேரத்தில் மற்ற உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். .
2. உளவியல்/அறிவாற்றல் சார்ந்த தேவைகள்: உங்கள் அன்பிற்குரியவர் மனச்சோர்வடைந்திருக்கலாம் அல்லது பிற மனநலப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கலாம். சரியானதாக அல்லது பழக்கமானதாகத் தோன்றாத சூழலில் அவர்கள் குழப்பமடையலாம் அல்லது அச்சுறுத்தலாக உணரலாம்.
3. சமூகத் தேவைகள்: உங்கள் அன்புக்குரியவர் தனிமையாகவோ, தனிப்படுத்தப்பட்டதாகவோ அல்லது சலிப்பாகவோ உணரலாம். .
4. சுற்றுச்சூழல்/வெளிப்புறத் தேவைகள்: உங்கள் அன்பிற்குரியவர் அதிகப்படியாகத் தூண்டுதலளிக்கும் சூழலில் (உதாரணமாக உரத்த சத்தம் அல்லது பரப்பரப்பான சூழல்) இருக்கலாம், அல்லது வித்தியாசமான மற்றும் அறிமுகமில்லாத வழக்கத்தை அனுபவிக்கலாம்.
நடத்தை மாற்றங்களை நிர்வகித்தல்
உங்கள் அன்பிற்குரியவரின் நடத்தைகளை நிர்வகிக்கும்போது, நீங்கள் ஒரு பராமரிப்பாளராக, சில நடத்தைகளை ஏற்படுத்தக்கூடிய சில காரணிகளைக் கண்டறிவது முக்கியம். உதாரணமாக:
- நடத்தையைத் தூண்டுவது எது: மலச்சிக்கல், வலி மற்றும் கழிப்பறைத் தேவைகள் அல்லது ஒலிகள், வாசனைகள் மற்றும் வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் தூண்டுதல்கள் போன்ற பொதுவாக பூர்த்தி செய்யப்படாத தேவைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
- நடத்தை அந்த நபருக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறதா: அப்படியானால், உடனடி சிகிச்சை தேவைப்படலாம்.
- நபரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படுகிறதா: அப்படியானால், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, வீட்டுச் சூழலில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு நடத்தை மாற்றத்திற்கும், நீங்கள் சேகரித்த மேற்கூறிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வது நல்லது, மேலும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவருக்கு நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியப் பிரச்சனைகளை (உதாரணமாக நோய்த்தொற்றுகள், மருந்துகளின் பக்கவிளைவுகள்) கண்டுபிடிக்க அவரைப் பார்க்கும் மருத்துவரிடம் (முதியோர் மருத்துவர் அல்லது முதியோர் உளவியல் மருத்துவர்) ஆலோசிக்கவும். உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் இதற்குக் காரணம் அல்ல என்பதைத் தீர்மானித்த பிறகு, மருந்தியல் மேலாண்மையைக் கருத்தில் கொள்வதற்கு முன், உங்கள் அன்பிற்குரியவரின் தேவையற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய மருந்து அல்லாத அணுகுமுறைகளை முதலில் முயற்சித்து, அவர்களின் நடத்தை மாற்றங்களைக் குறைக்க அல்லது தடுக்க வேண்டும்.
இது பெரும்பாலும் தினசரி பேணும், மருந்து அல்லாத முறைகள் மற்றும் நுட்பங்களாக இருக்கும், மேலும் நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும். மருந்தியல் அல்லாத நடவடிக்கைகளான உளவியல் சிகிச்சைகள் (எ.கா., இசை சிகிச்சை, கலை சிகிச்சை), பொதுவாக மருந்து சிகிச்சையை பரிசீலிக்கும் முன் பேணக்கூடிய முதல்-வரிசை அணுகுமுறை ஆகும். கருத்தில் கொள்ள வேண்டிய எளிய, மருந்தியல் அல்லாத நுட்பங்களின் சில எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன:
1. உங்களது அணுகுமுறையை மாற்றியமைத்திடுங்கள். அது மிகவும் கடினமாக இருக்கலாம், அதை எளிமைப்படுத்த வேண்டியிருக்கும் அல்லது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவருக்கு அது தொடர்பாக சில உதவி தேவைப்படலாம். அவர்கள் தங்களது இயலாமைகளில் கவனம் செலுத்தாமல், அவர்களின் திறன்களில் மீது கவனம் செலுத்த அவர்களுக்கு உதவுங்கள்.
2. உங்கள் அன்பிற்குரியவரின் உணர்வுகளை அங்கீகரியுங்கள். உங்கள் அன்பிற்குரியவரின் உணர்வுகளையும் அனுபவத்தையும் அங்கீகரியுங்கள், மேலும் உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் இந்த ஒப்புதலைப் பொறுமையாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு எதிராக நிற்கவோ அல்லது வாதிடவோ வேண்டாம் – அந்த நபர் தவறு செய்யும்போது எப்போதும் திருத்த வேண்டிய அவசியமில்லை.
3. அவர்களின் கவனத்தை வேறொன்றின் மீது திசைதிருப்புங்கள். நடத்தைக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிந்து, உங்கள் அன்பிற்குரியவரை அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அதை நிவர்த்திச் செய்யுங்கள்.
சில நேரங்களில், மருந்து அல்லாத மற்றும் மருந்தியல் மேலாண்மைகள் இரண்டின் கலவையும் சிறந்த பலன்களை வழங்கலாம். முதுமைக்கால மறதி நோய் மற்றும் நடத்தை மாற்றங்களின் மருந்தியல் மேலாண்மை பற்றி மேலும் படிக்கவும்.
நடத்தை மாற்றங்களை நிர்வகிப்பதற்கான சில உதவிக்குறிப்புகள்
“முதுமைக்கால மறதி நோய் பற்றிய அனைத்தும் – நிபுணர்களிடம் கேளுங்கள்” என்ற 6-பகுதி தொடர்களின் ஐந்தாவது அத்தியாயத்தில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் நடத்தையில் ஏன் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை மருத்துவர் ங் வாய் சோங் விளக்குகிறார். அலைந்துத் திரியும் நடத்தை, மீண்டும் மீண்டும் காணப்படும் நடத்தை, மருந்துகளை உட்கொள்ள மறுப்பது மற்றும் சாப்பிட மறுப்பது போன்ற இந்த நடத்தை மாற்றங்களை நிர்வகிப்பதற்கான உத்திகள் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார்.
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC)
ஐக்கிய நாட்டின் ஆல்சைமர்’ஸ் சமுதாயம் குடும்பப் பராமரிப்பாளர்களுக்கு, அவர்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மருந்தியல் அல்லாத அணுகுமுறையைப் பயன்படுத்தி அவர்களின் நடத்தை மாற்றங்களைக் குறைப்பதற்குமான வழிகளைப் பற்றிய பொதுவான உதவிக்குறிப்புகளை வழங்குகிறது. நடத்தை மாற்றங்களை நிர்வகிக்க ஐந்து படிநிலை உத்தியையும் இது பட்டியலிடுகிறது. ஆல்சைமர்’ஸ் சமுதாயத்தின் உதவிக்குறிப்புகள் மற்றும் உத்திகள் பற்றி மேலும் படிக்கவும்.
இறுதியாக, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்பிற்குரியவர் வெளிப்படுத்தும் நடத்தை மாற்றத்தை (மாற்றங்களை) நிர்வகிப்பது எளிதான காரியம் அல்ல. உங்கள் பராமரிப்புப் பயணத்தை சிறப்பாகக் கையாளுவதற்கு, குடும்பத்தினர், நண்பர்கள், ஆலோசகர்கள் அல்லது ஆதரவுக் குழுக்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் உங்களை நீங்கள் நன்றாகக் கவனித்துக்கொள்வதும் சமமான அளவுக்கு முக்கியம். உங்களை எப்படிக் கவனித்துக் கொள்வது என்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் ஆதாரங்களைப் பற்றி மேலும் அறிக.