அனைத்து வகையான முதுமைக்கால மறதி நோயும் படிப்படியாக ஏற்படுபவையாகும். அதாவது, முதலில் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், காலப்போக்கில் அவை மோசமடைகின்றன என்பதே இதன் அர்த்தமாகும். முதுமைக்கால மறதி நோய் வளர்ச்சியடையும்போது, இந்த நிலையைக் கொண்ட ஒருவருக்கு அன்றாட வாழ்வில் அதிக உதவியும் ஆதரவும் தேவைப்படும். முதுமைக்கால மறதி நோய் ஒவ்வொருவரையும் வித்தியாசமாகப் பாதிக்கிறது. இதில் அவர்களுடைய அறிகுறிகளின் அனுபவம், நோய் முற்றுகின்ற விகிதம் (இது பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோய்களுக்கு இடையே மாறுபடுகிறது), மற்றும் தேவையான ஆதரவு வகை மற்றும் நிலை ஆகியவை அடங்கும்.
முதுமைக்கால மறதி நோயில் பல கட்டங்கள் உள்ளன. அனைத்து வகையான முதுமைக்கால மறதி நோயிலும், நினைவுத்திறன் பிரச்சினைகள் தான் ஆரம்ப அறிகுறிகளாகும். அறிவாற்றல் திறன்களில் படிப்படியாக சரிவு ஏற்படுகிறது, மேலும் பிந்தைய கட்டங்களில், உதவியில்லை என்றால் அன்றாட நடவடிக்கைகள் அதிகச் சவாலானதாக மாறும்.
முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சியைப் பொதுவாக மூன்று கட்டங்களாக வகைப்படுத்தலாம் – லேசான, மிதமான மற்றும் முற்றிய கட்டங்கள். இந்தக் கட்டங்கள் முதுமைக்கால மறதி நோய் அறிகுறிகள் காலப்போக்கில் எவ்வாறு மாறுகின்றன என்பதற்கான எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாகும், மேலும் இவற்றை முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களும் அவர்களின் அன்புக்குரியவர்களும் எதிர்காலத்திற்குத் தயாராக உதவுவதற்கான ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம். ஒரு நபரின் நிலையை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொருத்தில் பார்ப்பது சிரமமானதாக இருக்கலாம், ஏனெனில் அறிகுறிகள் வெவ்வேறு வரிசையில் தோன்றலாம் மற்றும் நிலைகள் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கலாம்.1 எனினும், கட்டங்களைப் புரிந்துகொள்வது பொதுவாக முதுமைக்கால மறதி நோய் எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதை அறிய நமக்கு உதவுகிறது.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவரை அறிகுறிகள் எவ்வாறு பாதிக்கின்றன மற்றும் மூன்று கட்டங்களில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான ஒட்டுமொத்த யோசனையைப் பின்வருபவை வழங்குகின்றன:
அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள்
இலேசான முதுமைக்கால மறதி நோய்
• அடிப்படையான அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், அதாவது தனிப்பட்ட சுகாதாரம், ஆடை அணிதல் போன்றவற்றை இன்னும் சுயமாகக் கவனித்துக் கொள்ள முடியும்
• பின்வருவனவற்றில் சிறிது சிரமத்தைக் கொண்டிருக்கலாம்:
⇒ பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல்
⇒ பண மேலாண்மை
• சுத்தம் செய்தல் மற்றும் சமைத்தல் போன்ற வீட்டு வேலைகளைத் திட்டமிடுவதிலும் நிர்வகிப்பதிலும் சிரமம் இருக்கலாம்
• நடவடிக்கைகளைத் தொடங்குவதில் சிரமம் இருக்கலாம்
மிதமான முதுமைக்கால மறதி நோய்
• அன்றாட வேலைகளில் வழக்கமான நினைவூட்டல்களும் குறிப்புகளும் தேவைப்படுவது
• ஆடை அணிதல், தனிப்பட்ட சுகாதாரம், கழிப்பறைக்குச் செல்வது, உணவு உண்பது மற்றும் வேறு சில அன்றாட நடவடிக்கைகளில் உதவி தேவைப்படுவது.
• விழுவதற்கான அதிக ஆபத்து இருப்பது
முற்றிய முதுமைக்கால மறதி நோய்
• சுய பராமரிப்பை மேற்கொள்ள இயலாமை. சுய சுகாதாரத்தைப் பேணுவது, சாப்பிடுவது, கழிப்பறைக்குச் செல்வது, குளிப்பது போன்றவற்றில் முழுவதுமாகப் பிறரைச் சார்ந்திருப்பது
• உடல் சமநிலை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பிரச்சினைகள், இதனால் நிலையின்மையும் விழுவதும் நிகழ்வது
• நடமாடுவதில் பிரச்சினைகள் இருக்கலாம், படுக்கையிலேயே இருக்க வேண்டியிருக்கலாம்
• உண்ணுவதிலும் விழுங்குவதிலும் பிரச்சினைகள்
• சிறுநீர்ப்பை மற்றும் குடல் கட்டுப்பாட்டை இழத்தல்
நடத்தைகள்
இலேசான முதுமைக்கால மறதி நோய்
• அக்கறையின்மை; தாங்கள் ஈடுபடுகின்ற நடவடிக்கைகளில் ஆர்வமின்மை
• மக்களுடன் பழகுவதில் இருந்து விலகலாம்
• அதிவிரைவான மனநிலை மாற்றங்கள் அல்லது குறைந்த மனநிலை
மிதமான முதுமைக்கால மறதி நோய்
• வழிதெரியாமல் சுற்றித் திரிதல்
• திரும்பத் திரும்ப செயல்களைச் செய்தல்/கேள்விகளைக் கேட்டல்
• தூங்கும் வழக்கம் தலைகீழாக மாறுதல்
• நன்றாகத் தகவல்தொடர்பு கொள்ள முடியாத போது விரக்தியடைதல்
• மனச்சோர்வு அடைந்தவராகவும், எளிதில் வருத்தமடைபவராக, கிளர்ச்சியடைந்தவராக, சந்தேகப்படுபவராகவும் தோன்றலாம்
முற்றிய முதுமைக்கால மறதி நோய்
• தேவைகளைத் தெரிவிப்பதற்கான வழிமுறையாக அழுவது, கத்துவது அல்லது திரும்பத் திரும்ப குரல் எழுப்புவது
• குழப்பம் காரணமாக பராமரிப்பை மறுப்பது
• செயலற்ற தன்மை/ விலகியிருத்தல்
அறிவுத்திறன் குறைதல்
நினைவுத்திறன்
இலேசான முதுமைக்கால மறதி நோய்
• மறதித்தன்மை (குறுகிய கால நினைவுத்திறனில் பிரச்சினை)
• தீர்மானிப்புத் திறன் குறைபாடு
• வெற்றெண்ணக் குறைபாடு
• பொருட்களை இடமாற்றி வைத்தல்
மிதமான முதுமைக்கால மறதி நோய்
• குறுகிய மற்றும் நீண்ட கால நினைவுத்திறனில் பிரச்சினை
• சில குடும்ப உறுப்பினர்களை மறக்கக் தொடங்கலாம் அல்லது அடையாளம் காண இயலாமல் போகலாம்
• சொந்த முகவரி அல்லது தொலைபேசி எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகலாம்
முற்றிய முதுமைக்கால மறதி நோய்
• கடந்த காலம் அல்லது நிகழ்காலம் பற்றிய வெளிப்படையான விழிப்புணர்வு இல்லாமை
• தற்போதைய சுயத்தை அடையாளம் காண இயலாமை
• பொதுவான பொருட்களை அடையாளம் காண இயலாமை
மொழி மற்றும் தகவல்தொடர்பு
இலேசான முதுமைக்கால மறதி நோய்
• கதைக்களங்கள் மற்றும் உரையாடல்களைப் பின்பற்றுவதில் சிரமம்
• சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் அல்லது பெயர்களை நினைவில் கொள்வதில் சிரமம்
மிதமான முதுமைக்கால மறதி நோய்
• திரும்பத் திரும்ப பேசுவதால் அல்லது சூழல்களைப் புரிந்து கொள்ள இயலாததால் தகவல்தொடர்பு கொள்வதில் சிரமம்
• உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் தேவைகளைத் தெரியப்படுத்துவதிலும் சிரமம்
முற்றிய முதுமைக்கால மறதி நோய்
• மொழி வாயிலாகத் தகவல்தொடர்பு கொள்ள இயலாமை
• அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபட இயலாமை
• தகவல்தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம் அல்லது சிலநேரங்களில் பதில்வினையாற்றாமல் இருக்கலாம்
• பொருத்தமற்ற பேச்சு
• கத்துவதன் மூலம் தேவைகளை வெளிப்படுத்தலாம்
கணக்கீடு
இலேசான முதுமைக்கால மறதி நோய்
• நிதியைக் கையாள்வதில் பிரச்சினைகள்
மிதமான முதுமைக்கால மறதி நோய்
• எளிய கணக்கீடுகளைச் செய்வதில் பிரச்சினைகள் இருக்கலாம்
முற்றிய முதுமைக்கால மறதி நோய்
• எந்தக் கணக்கீட்டையும் செய்ய இயலாமை
சூழல் உணர்வு இல்லாமை
இலேசான முதுமைக்கால மறதி நோய்
• எப்போதாவது திசை தெரியாமல் போனதாக உணரலாம், ஆனால் அடிக்கடி செல்லும் இடங்களுக்குச் செல்ல முடியலாம்
• பரிச்சயம் குறைவான இடங்களில் தொலைந்து போகலாம்
மிதமான முதுமைக்கால மறதி நோய்
• பொதுவாக குழப்பத்தை அனுபவிக்கலாம்; நாள், தேதி மற்றும்/அல்லது நேரத்திற்கு மோசமான அறிமுகத்தைக் கொண்டிருக்கலாம்
• பரிச்சயமான வெளியிடங்களில் கூட தொலைந்து போகலாம்
முற்றிய முதுமைக்கால மறதி நோய்
• இரவையும் பகலையும் வேறுபடுத்திப் பார்க்க இயலாமை
• வீட்டில் தொலைந்து போகலாம்
Tell us how we can improve?
- Alzheimer’s Society. (2021, February 24). The progression and stages of dementia. https://www.alzheimers.org.uk/about-dementia/symptoms-and-diagnosis/how-dementia-progresses/progression-stages-dementia#content-start