Playback speed:
முதுமைக்கால மறதி நோயைச் சுற்றி பல மூடநம்பிக்கைகள் உள்ளன. அவை பெரும்பாலும் முதுமைக்கால மறதி நோயின் களங்கத்தை அதிகப்படுத்துகின்றன மற்றும் நிலைமையைப் பற்றிய எதிர்மறையான பிற்போக்கு எண்ணங்களை நிலைநிறுத்துகின்றன.
தவறான கருத்து: முதுமைக்கால மறதி நோய் என்பது முதுமை அடைவதன் இயற்கையான பகுதியாகும்.
முதுமைக்கால மறதி நோய் என்பது மூளையைப் பாதிக்கின்ற ஒரு நோயாகும், இது முதுமை அடைவதன் இயற்கையான பகுதி அல்ல.
இது மூளையை பாதிக்கும் ஒரு நோய் நிலை, இது படிப்படியாக ஏற்படுகின்ற நினைவுத்திறன் இழப்பு, அறிவாற்றல் திறன்களில் சரிவு மற்றும் ஆளுமை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது.
இயல்பாக முதுமை அடைவதில், ஒரு நபரால்:
- எப்போதாவது நினைவுத்திறன் குறைபாடுகள் இருந்தபோதிலும், அன்றாட நடவடிக்கைகளைத் தொடரவும் சுதந்திரமாக செயல்படவும் முடியும்.
- திசைகளை நினைவில் வைத்துக் கொள்ள மற்றும்/அல்லது புதிய இடங்களுக்குச் செல்ல சிறிது நேரம் தேவைப்படலாம்.
- இன்னமும் தீர்மானிப்புத் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் கொண்டவராக இருக்க முடியும்.
- குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நினைவுபடுத்தவும் விவரிக்கவும் முடியும்.
- உரையாடுவதற்கான சரியான வார்த்தையைக் கண்டுபிடிப்பதில் சிரமத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் உரையாடலைத் தொடர்வதில் பிரச்சினை இருக்காது.
தவறான கருத்து: முதுமைக்கால மறதி நோய் என்பது ஆல்சைமர் நோயைப் போன்றதாகும்.
பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோய் உள்ளன, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு காரணங்கள் மற்றும் அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன. மூளையில் ஏற்படும் மாற்றங்களே முதுமைக்கால மறதி நோயின் காரணங்களில் பொதுவானதாகும்.
முதுமைக்கால மறதி நோயின் காரணங்களில் அடங்குவன: ஆல்சைமர் நோய், இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய், பக்கவாதம், பார்கின்சன் நோய், லூயி போடி (Lewy Body) மற்றும் மூளையின் முன்பகுதியில் உண்டாகும் நரம்பியல் குறைபாடு (Frontotemporal Dementia, FTD) போன்ற மீளமுடியாத காரணங்கள்; மற்றும் தைராய்டு சுரப்பு குறை, வைட்டமின் B12 குறைபாடு மற்றும் மதுபானம் தொடர்பான நோய்க்குறிகள் போன்ற சாத்தியமான மீளக்கூடிய காரணங்கள்
தவறான கருத்து: நினைவுத்திறன் இழப்பு என்பது ஒரு நபருக்கு முதுமைக்கால மறதி நோய் உள்ளது அல்லது வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
சில நினைவுத்திறன் குறைபாடுகள் மற்றும் சரியான வார்த்தையைக் கண்டுபிடிப்பது போன்ற செயலாக்க வேகம் குறைவது, மூப்படையும்போது ஏற்படுகிறது.
தவறான கருத்து: முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் நினைவுத்திறன் இழப்பை மட்டுமே அனுபவிக்கின்றனர்.
நினைவுத்திறன் இழப்பு (மறதித்தன்மை) என்பது முதுமைக்கால மறதி நோய் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனுபவிக்கின்ற அறிகுறிகளில் ஒன்றாகும். இது மட்டுமே அறிகுறி அல்ல.
பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோயின் பொதுவான அறிகுறிகளில் அடங்குவன:
- படிப்படியாக ஏற்படுகின்ற மற்றும் காலப்போக்கில் படிப்படியாக மோசமாகின்ற நினைவுத்திறன் இழப்பு (மறதித்தன்மை). உடனடியான மற்றும் குறுகிய கால நினைவுத்திறன் இழப்பு முதலில் ஏற்படுகிறது.
- தகவல்தொடர்புகளில் சிரமம்.
- பரிச்சயமான முகங்கள் அல்லது பொருட்களை அடையாளம் கண்டறிவதில் பிரச்சினைகள்.
- பொதுவான பிரச்சினையைத் தீர்க்கின்ற, முடிவெடுக்கின்ற மற்றும் தீர்மானிக்கின்ற திறன்கள் மோசமடைந்து, அதிக ஒழுங்கற்றதாக மாறுவது.
- சட்டைப் பொத்தானைப் போடுவது, ஆடை அணிவது மற்றும் சாப்பிடும்போது பாத்திரங்களைப் பயன்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் பிரச்சினைகள்.
சிலநேரங்களில், பிற நடத்தை மற்றும் உளவியல் சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்:
- மனச்சோர்வு
- கிளர்ச்சி
- மாயத்தோற்றங்கள்
- மனக்கவலை
- சித்தப்பிரமை
- தூக்கப் பிரச்சினைகள்
தவறான கருத்து: முதுமைக்கால மறதி நோய் வயதானவர்களை மட்டுமே பாதிக்கிறது.
முதுமைக்கால மறதி நோய் இளம் வயதினருக்கும் ஏற்படலாம். 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் என அழைக்கப்படுகிறது.
வேறு சில நாடுகளில் உள்ளதைப் போலவே சிங்கப்பூரிலும் இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது சில காரணங்களால் இருக்கலாம், அதில் நோய் நிலை பற்றிய அதிக விழிப்புணர்வு மற்றும் சிறந்த சோதனை முறைகள் அடங்கும்.
இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய்க்கான முதல் இரண்டு காரணங்களாக, மிகவும் பொதுவான காரணமான தற்போதைய ஆல்சைமர் நோயும், இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயும் உள்ளன.
மூளையில் தொடர்ச்சியாக சிறு பக்கவாதத்தை ஏற்படுத்துகின்ற இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயானது, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை நோய்களுடன் தொடர்புடையது. வாழ்க்கைமுறை நோய்கள் அதிகரித்து வரும் போக்கானது, இளையர்களிடம் முதுமைக்கால மறதி நோயைக் கண்டறியும் விகிதம் அதிகரித்து வருவதற்குப் பங்களிக்கும்.
முதுமைக்கால மறதி நோய் இளையர்களிடம் எப்படி இருக்கும் என்பதும், பெரியவர்களிடம் எப்படி இருக்கும் என்பதும் வேறுபட்டிருக்கலாம். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் இளையர்கள் மொழி, பிரச்சினைகளைத் தீர்த்தல், திட்டமிடல் மற்றும் பொருளை அடையாளம் அறிதல் ஆகியவற்றில் அதிகப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அதிக நடத்தை மாற்றங்களையும் காண்பிக்கலாம்.1,2
தவறான கருத்து: முதுமைக்கால மறதி நோயை முற்றிலும் தடுக்க முடியும்.
முதுமைக்கால மறதி நோயை முழுமையான உறுதியுடன் முற்றிலுமாகத் தடுக்க முடியாது.3 எனினும், முதுமைக்கால மறதி நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்க வழிகள் உள்ளன.
வயது, மரபணுக்கள் அல்லது அடையும் கல்வித் தகுதி அளவுகள் போன்ற முதுமைக்கால மறதி நோயின் சில ஆபத்துக் காரணிகளை மாற்றுவது கடினம் அல்லது சாத்தியமற்றது.
எனினும், முதுமைக்கால மறதி நோய் அபாயத்தைக் குறைக்க அல்லது முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தப் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
- இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவிற்கு வைத்துக்கொள்ளுங்கள்
- உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இரத்தச் சர்க்கரையைக் கண்காணியுங்கள்
- சமச்சீர் உணவை உண்ணுங்கள்
- புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்
- தொடர்ந்து உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்
- அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைத் தவிருங்கள்
- மக்களுடன் கலந்து பழகுங்கள்
தவறான கருத்து: ஒருவருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும்போது அவருக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற எண்ணம் ஏற்படுகிறது.
முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவது என்பது மரண தண்டனை அல்ல. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒருவர் தனது நிலைமைக்கு ஏற்றவாறு வாழ்க்கையைத் தொடர்ந்து மாற்றியமைத்து, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவரும் அவரைச் சுற்றியுள்ளவர்களும் இன்னமும் தனிப்பட்ட வளர்ச்சி, உறவுமுறை சார்ந்த வளர்ச்சியை அனுபவிக்க முடியும், மேலும் முதுமைக்கால மறதி நோய் முற்றுவதால் ஏற்படும் துயரம் மற்றும் இழப்புக்கு மத்தியில் அர்த்தமுள்ள அனுபவங்களை அனுபவிக்க முடியும்.
முதுமைக்கால மறதி நோய் படிப்படியாக உருவாகிறது, மேலும் திறன்களை இழப்பது ஒரே நேரத்தில் நடக்காது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் சில காலத்திற்குத் தொடர்ந்து பணிகளை செய்ய இயலும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அர்த்தமுள்ள சமூக வாழ்க்கையில் தொடர்ந்து சேர்க்கப்படுவதற்கு அவருக்கு ஆதரவு இருக்கலாம். உதாரணமாக, சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் சமூக வாழ்வில் பங்கேற்கும் வகையில் சுற்றுச்சூழலை வடிவமைக்க பல்வேறு துறைகள் மற்றும் சமூகத்தில் உள்ள பங்காளர்களால் முதுமைக்கால மறதி நோயை உள்ளடக்கிய முனைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
முதுமைக்கால மறதி நோயை உள்ளடக்கிய சுற்றுச்சூழல்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
தவறான கருத்து: முதுமைக்கால மறதி நோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் எந்தப் பயனும் இல்லை, ஏனெனில் அது குணமாவதில்லை.
முதுமைக்கால மறதி நோய்க்குச் சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களின் நிலைகளை நிர்வகிக்க மருந்தியல் மற்றும் உளவியல் சார்ந்த முறைகள் உள்ளன.
- மீளக்கூடிய காரணங்கள் மற்றும் ஆபத்துக் காரணிகளுக்குச் சிகிச்சையளிக்க முடியும்.
- முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சியை மெதுவாக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
- முதுமைக்கால மறதி நோயின் நடத்தையியல் மற்றும் உளவியல் சார்ந்த அறிகுறிகளை (BPSD) மருந்து அல்லாத நடவடிக்கைகள் மற்றும் மருந்துகள் மூலம் நிர்வகிக்கலாம்
தவறான கருத்து: முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களால் முடிவுகளை எடுக்க முடியாது, விஷயங்களைச் செய்ய முடியாது, தொடர்பு கொள்ள முடியாது அல்லது தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அறியாமல் இருப்பார்கள்.
முதுமைக்கால மறதி நோய் படிப்படியாக உருவாகிறது. முந்தைய கட்டங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் இன்னமும் சில முடிவுகளை எடுப்பதற்கும், வெவ்வேறு செயல்களைச் செய்வதற்கும், தகவல்தொடர்பு கொள்வதற்கும், தங்களைப் பற்றியும் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றியும் விழிப்புடன் இருப்பார்கள். முதுமைக்கால மறதி நோயின் பிந்தைய கட்டங்களில் கூட, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு விருப்பங்கள், திறன்கள், தகவல்தொடர்பு கொள்வதற்கான வழிகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை உள்ளன, அவை அவற்றின் சொந்த வழியில் வெளிப்படுத்தப்படுகின்றன.
தவறான கருத்து: முதுமைக்கால மறதி நோய் என்பது பரம்பரை நோயாகும்.
சில பெற்றோரிடமிருந்து சந்ததியினருக்கு மரபணுக்கள் மூலம் தொடரலாம் அது மரபுவழி வந்ததாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முதுமைக்கால மறதி நோய் என்பது கண்டிப்பாக மரபுவழி வருவதல்ல.
- முதலாவதாக, மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கூட்டிணைவு காரணமாக முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சி ஏற்படுகிறது. ஒரு நபருக்கு முதுமைக்கால மறதி நோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்க அல்லது குறைக்க இந்தக் காரணிகள் இணைந்து செயல்படுகின்றன. முதுமைக்கால மறதி நோய் ஏற்பட்டுள்ள உயிரியல் பெற்றோர் அல்லது உறவினரைக் கொண்டுள்ள ஒரு நபருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் என்று கண்டிப்பாகக் கூற முடியாது. எனினும், இந்த நபருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.
- இரண்டாவதாக, ஒரு உயிரியல் பெற்றோர் அல்லது உறவினருக்கு இருக்கும் முதுமைக்கால மறதியின் வகையானது ஒரு நபருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைப் அதிகரிக்கும். ஃப்ரெண்டொடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal Dementia, FTD) போன்ற சில வகையான முதுமைக்கால மறதி நோய், மற்ற வகை முதுமைக்கால மறதி நோயுடன் ஒப்பிடும்போது வலுவான மரபணு இணைப்பைக் கொண்டுள்ளது.
முதுமைக்கால மறதி நோய் பற்றிய சில மூடநம்பிக்கைகள் பற்றி ONE FM 91.3 வானொலித் தொகுப்பாளர்கள் டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்பின் CEO ஜேசன் ஃபூவுடன் உரையாடுவதைப் பாருங்கள்.
Tell us how we can improve?
- Gan, E. (2017, June 14). Dementia affecting more people under the age of 65. TODAYOnline. https://www.todayonline.com/singapore/dementia-affecting-more-people-under-age-65
- Teo, J. (2020, 21 June). More here diagnosed with young onset dementia, says NNI. SingHealth. https://www.singhealth.com.sg/news/tomorrows-medicine/more-here-diagnosed-with-young-onset-dementia-says-nni
- National Health Service. (n.d.). Can dementia be prevented? Retrieved 4 March, 2021, from https://www.nhs.uk/conditions/dementia/dementia-prevention/