முதுமைக்கால மறதி நோய் என்பது ஒற்றை நோயல்ல, அது அறிகுறிகளின் ஓர் தொகுப்பாகும். மூளையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களால் ஏற்படுகின்ற பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோய்கள் உள்ளன.
ஆல்சைமர் நோய்
ஆல்சைமர் நோய் என்பது முதுமைக்கால மறதி நோயின் மிகவும் பொதுவான வகையாகும். இது மூளையின் உயிரணுக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில வகையான புரதங்கள் திரள்வதால் ஏற்படுகிறது. இது ஒரு மெல்ல வளர்ச்சியடைகின்ற (மெதுவான) தொடக்கத்தைக் கொண்டுள்ளது, மேலும் இது ஒரு வளர்ச்சியடைகின்ற நோயாகும், இதனால் அறிகுறிகள் பல ஆண்டுகளாகப் படிப்படியாக மோசமடைகின்றன. AD என்பது மீளமுடியாத, நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன்களை மெதுவாக பாதிக்கின்ற நோயாகும், மேலும் இது இறுதியாக உணவு உண்ணுதல் போன்ற எளிய வேலைகளை மேற்கொள்ளும் திறனைப் பாதிக்கலாம். தற்போது, இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு எந்தச் சிகிச்சையும் இல்லை, ஆனால் சில சிகிச்சைகள் AD-இன் அறிகுறிகளை கட்டுபடுத்த உதவலாம்.
இரத்தநாள முதுமைக்கால மறதி நோய்
இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் என்பது ஒரு வகையான முதுமைக்கால மறதி நோயாகும், இது மூளையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு அல்லது காயத்தால் ஏற்படுகிறது. இந்த வகையான முதுமைக்கால மறதி நோயின் ஆரம்பம் திடீரென இருக்கலாம், இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயைக் கொண்ட ஒரு நபர் மூளை ஸ்கேன்களில் அறிகுறிகள் இல்லாத பக்கவாதம் ஏற்பட்டதற்கான ஆதாரத்தையும் வெளிப்படுத்தலாம். இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் மீளக்கூடியதாக இல்லை என்றாலும், அதன் ஆபத்துக் காரணிகளுக்குச் சிகிச்சையளிப்பது முக்கியமாகும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக இரத்தக் கொழுப்பு மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் போன்ற ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்துவது நோயின் வளர்ச்சியை மெதுவாக்கி, பக்கவாதம் மீண்டும் ஏற்படுவதைக் குறைக்கலாம்.
லெவி பாடி டிமென்ஷியா
லெவி பாடி டிமென்ஷியா என்பது ஒரு வகையான முதுமைக்கால மறதி நோயாகும், இது மூளையின் உயிரணுக்களுக்குள் லெவி பாடிகள் எனப்படும் அசாதாரண கட்டமைப்புகளின் திரட்சியின் போது ஏற்படுகிறது. இது இயக்கம், சிந்தனை மற்றும் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பார்கின்சன் நோயினாலும் LBD-இன் அறிகுறிகள் சிலநேரங்களில் ஏற்படலாம் – இந்த அறிகுறிகளில் மந்தநிலை, நடுக்கங்கள், கடினமான தசைகள் மற்றும் தெளிவான காட்சிசார் மாயத்தோற்றங்கள் ஆகியவை அடங்கும். மற்ற முக்கிய அறிகுறிகளில் கவனம், ஒழுங்கமைப்பு, பிரச்சினையைத் தீர்த்தல் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றுடனான பிரச்சினைகளும் அடங்கும். LBD-ஐக் கொண்டிருப்பவர்கள், அவர்களின் அதிகரித்த இறுக்கத்தன்மை, உறுதியற்ற தன்மை மற்றும் மெதுவான நடை போன்றவற்றின் காரணமாக கீழே விழுவதற்கான அதிக அபாயங்களைக் கொண்டுள்ளனர்.1
ஃப்ரெண்டொடெம்போரல் டிமென்ஷியா
ஃப்ரெண்டொடெம்போரல் டிமென்ஷியா என்பது ஒரு வகை முதுமைக்கால மறதி நோயாகும், இது குறிப்பிடத்தக்க ஆளுமை மாற்றங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மொழி சிரமங்களால் வகைப்படுத்தப்படுகிறது. இது மூளையின் முன் மற்றும்/அல்லது பக்கவாட்டுப் பகுதிகளில் படிப்படியாக ஏற்படுகின்ற சேதத்தால் ஏற்படுகிறது. FTD ஆனது அறிவுசார் திறன்கள் மற்றும் ஆளுமை, மனவுணர்வு மற்றும் நடத்தை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம், அவை மூளையின் முன் மடல் செயல்பாட்டுடன் தொடர்புடையவை. மூளையின் பக்கவாட்டு மடல்களின் செயல்பாட்டுடன் தொடர்புடைய பொருள்களை அடையாளம் கண்டறிதல், புரிதல் அல்லது மொழி வெளிப்பாடு ஆகியவற்றிலும் FTD சிரமத்தை ஏற்படுத்தலாம்.
FTD பெரும்பாலும் ஆல்சைமர் நோய், பார்கின்சன் நோய் அல்லது மனச்சோர்வு, பெருவிருப்பக் கட்டாய மனப்பிறழ்வு அல்லது ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநலக் கோளாறுகள் என்று தவறாகக் கருதப்படுகிறது. FTD-க்கு சிகிச்சை அல்லது குணப்படுத்தல் இல்லை என்றாலும், மருந்துகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் அதன் அறிகுறிகளைப் போக்க உதவலாம். FTD பெரும்பாலும் இளம் வயதில், சுமார் 45-65 வயதில் உருவாகிறது. 65 வயதிற்கு குறைவான வயதில் முதுமைக்கால மறதி நோய் உருவாகும் போது, அவர்களுக்கு இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோய் இருப்பதாக கூறப்படுகிறது.
மதுபானம் தொடர்பான முதுமைக்கால மறதி நோய்
மதுபானம் தொடர்பான முதுமைக்கால மறதி நோய் என்பது மதுபானம் தொடர்பான மூளை பாதிப்பால் ஏற்படுகின்ற ஒரு அறிவாற்றல் கோளாறாகும். வைட்டமின் குறைபாடுகள், குறிப்பாக கடுமையான வைட்டமின் B-1 குறைபாடு காரணமாக மூளையின் சில பகுதிகள் சேதமடையக்கூடும், ஏனெனில் மதுபானம் இந்த வைட்டமின் உறிஞ்சுதலையும் பயன்பாட்டையும் தடுக்கிறது. அதிக அளவு மதுபானங்களைத் தொடர்ந்து குடிப்பதே மதுபானம் தொடர்பான முதுமைக்கால மறதி நோய்க்கான ஆபத்துக் காரணியாகும்.2
Tell us how we can improve?
கூடுதல் வளஆதாரங்கள்
60களில் டிமென்ஷியா சிங்கப்பூர்: அத்தியாயம் 1 – முதுமைக்கால மறதி நோய் என்றால் என்ன? அது எவ்வளவு பரவலாக உள்ளது?
ஆதாரம்: டிமென்ஷியா சிங்கப்பூர்
60களில் டிமென்ஷியா சிங்கப்பூரின் முதல் அத்தியாயத்தில், CEO ஜேசன் ஃபூ அவர்கள் முதுமைக்கால மறதி நோய் பற்றிய சில முக்கியமான உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் பகிர்ந்து கொண்டு இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிவிக்கிறார்.
முதுமைக்கால மறதி நோயை (டிமென்ஷியா) புரிந்துகொள்ளுதல்
ஆதாரம்: கூ டெக் புவாட் மருத்துவமனை
இந்த உதவித்தொகுப்பு முதுமைக்கால மறதி நோயின் வகைகள், கட்டங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இன்று முதுமைக்கால மறதி நோய்க்கான தரநிலைப் பராமரிப்பாகப் பரவலாக ஒப்புக் கொள்ளப்படும் நபரை மையமாகக் கொண்ட பராமரிப்பின் தத்துவம் பற்றிய தகவல்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.
- Dementia Australia. (n.d.). Lewy Body Disease. https://www.dementia.org.au/about-dementia/types-of-dementia/lewy-body-disease
- Dementia Australia. (n.d.). Alcohol related dementia. https://www.dementia.org.au/about-dementia/types-of-dementia/alcohol-related-dementia