முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்ற ஒரு நபராக, அல்லது அந்நபரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பராக, மருத்துவரைச் சந்திக்கும்போது என்ன நடக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம்.
நோயறிதல் செயல்முறைகளால், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவின் உதவியுடன், இந்த முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
நோயறிதல் செயல்முறையின் கண்ணோட்டம்
இச்செயல்முறையில் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் உடனான சில அமர்வுகள் முதல் பல அமர்வுகள் அடங்கியுள்ளன. இது பெரும்பாலும் ஒரு தனியார் மருத்துவர் (GP) அல்லது குடும்ப மருத்துவரைப் பலதுறை மருந்தகம் அல்லது GP சிகிச்சையகத்தில் சந்திப்பதில் இருந்து தொடங்குகிறது. GP அல்லது மருத்துவர் ஒரு தொடக்கத் சோதனை மற்றும் கலந்தாய்வை நடத்துவார்.
GP அல்லது குடும்ப மருத்துவர், முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும் நபரை மேற்கொண்டு கலந்தாலோசனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்காக ஒரு சிறப்புக் குழுவிடம் அல்லது நரம்பியல் நிபுணர், மூத்தோர் மருத்துவர் அல்லது மனநல மருத்துவர் போன்ற நிபுணர்களிடம் சில அமர்வுகள் முதல் பல அமர்வுகளுக்காகப் பரிந்துரைக்கலாம்.
இந்த அமர்வுகளில், ஒரு நபருக்கு முதுமைக்கால மறதி நோய் இருக்கிறதா என்பதையும், சாத்தியமிருந்தால், அவருக்கு என்ன வகையான முதுமைக்கால மறதி நோய் உள்ளது என்பதையும் கண்டறிய கலந்தாலோசனைகள், மருத்துவ வரலாற்றை விரிவாகக் கேட்டறிவது, இரத்தப் பரிசோதனைகள், அறிவாற்றல் சோதனைகள் மற்றும் மூளை ஸ்கேன் ஆகியவை அடங்கும்.
பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோய் பற்றி மேலும் படியுங்கள்.
மருத்துவரைச் சந்திக்க வரும்போது, உங்கள் நம்பிக்கைகுரிய ஒருவரை உடன் அழைத்து வரவும்
நோயறிதல் செயல்முறைக்கு உட்படும் நபர்கள், அவர்களை நன்கு அறிந்த நம்பிக்கைகுரிய ஒருவருடன் வருமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்; அவர் இந்நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நபருடன் வசிக்கின்ற ஒருவராக அல்லது நெருக்கமாக இருக்கின்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களாக இருக்கலாம். மருத்துவருடனான முதல் வருகையின் போது இது மிகவும் முக்கியமாகும்.
உடன் வரும் நபர், நோயறிதல் செயல்முறையில் உதவக்கூடிய முக்கியமான தகவல்களை வழங்குகின்ற ஒரு தகவல் அளிப்பவராகச் செயல்படலாம்.
அதோடு, இந்த நபர் நோயறிதல் சோதனை செய்யப்படும் நபருக்கு மேற்கொண்டு நோயறிதல் அமர்வுகளைத் தொடர உதவலாம். இந்தப் பயணம் சவாலானதாக இருப்பதால், நோயறிதல் செயல்முறைக்கு உட்படுகின்ற நபருடன் இணைந்து பயணிக்கும் அவர்கள் ஆதரவின் ஆதாரமாகவும் இருக்கலாம்.
நோயறிதல் செயல்முறைக்கு உட்படும் நபர்கள் தங்களின் நியமன சந்திப்புகளுக்கு ஒருவரை அழைத்து வருவது மிகவும் உதவியாக இருக்கும்.
நோயறிதல் செயல்முறையில் இந்த நடைமுறைகளை உள்ளடங்கியிருக்கலாம்
1. நேர்காணல்கள்
அறிகுறிகளை அனுபவிக்கும் நபரும், அவர்களை நன்கு அறிந்த, குடும்ப உறுப்பினர்களும், மருத்துவர் அல்லது செவிலியர் போன்ற சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களால் நேர்காணல் செய்யப்படுவார்கள்.
சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் பெரும்பாலும் பின்வருவன குறித்து மேலும் விரிவான தகவல்களைக் கேட்பார்கள்:
- அந்நபர் என்ன அறிகுறிகளை அனுபவித்தார், எப்போது அனுபவித்தார், எவ்வளவு காலத்திற்கு அனுபவித்தார். அறிகுறிகளில் நினைவுத்திறன் இழப்பு, மொழிப் பிரச்சினைகள், போகும் திசை தெரியாமல் தடுமாறுவது, ஒருவரின் மனநிலை மற்றும் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் திட்டமிடுவதற்கான ஒருவரின் திறனில் உள்ள பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.
- இந்த அறிகுறிகள் அந்நபரின் அன்றாடப் பணிகள் மற்றும் நடைமுறைகளை எவ்வாறு பாதித்தன
- மருத்துவ வரலாறு, ஏதேனும் நடத்தை மற்றும் உளவியல் சார்ந்த அறிகுறிகளின் இருப்பு மற்றும் அந்நபர் எடுத்துக் கொள்கின்ற மருந்துகள் மற்றும் குறைநிரப்பிகள் உள்ளிட்ட அந்நபரின் பின்னணி
- அந்நபரின் கல்வி மற்றும் வேலை சார்ந்த பின்னணி
நோயறிதல் செயல்முறையானது அந்நபரின் நிலையைப் பற்றிய நேர்காணல்களை உள்ளடக்கியிருக்கும்.
2. தற்போதுள்ள பிற மருத்துவ நிலைகளுக்கான பரிசோதனைகள்
பிற மருத்துவ நிலைகள் இருப்பதை நிராகரிக்க அல்லது அடையாளம் காண, மருத்துவர்கள் பெரும்பாலும் முதுமைக்கால மறதி நோயைத் தவிர வேறு நோய் நிலைகளுக்காகப் பரிசோதிப்பார்கள். இந்த நோய் நிலைகள் முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை இன்னும் கடுமையானதாக ஏற்படுத்தலாம், பங்களிக்கலாம் அல்லது உருவாக்கலாம்.
இந்த நோய் நிலைகளில் சிலவற்றில் மனச்சோர்வு போன்ற மனநிலைக் கோளாறுகள்; பக்கவாதம்; தீவிர மூளைக் காயங்கள் (Traumatic Brain Injury, TBI); நரம்பியல் சார்ந்த நோய் நிலைகள்; உளக்குழப்பம்; மற்றும் மனநோய் போன்ற மனநல நோய் நிலைகள் அடங்கும்.
முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் பிற நோய் நிலைகள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியுங்கள்.
3. அறிவாற்றல் தகுதிச் சோதனை மற்றும் மதிப்பீடுகள்
அறிவாற்றல் குறைபாடு தான் முதுமைக்கால மறதி நோயின் முக்கிய அறிகுறியாக இருப்பதால், அறிவாற்றல் மற்றும் மொழிச்சார்ந்த சோதனைகள் (உதாரணமாக, நோக்குநிலை மற்றும் குறுகிய மற்றும் நீண்டகால நினைவாற்றல் சோதனைகள்) நடத்தப்படுகின்றன.
4. இரத்தப் பரிசோதனைகள்
அந்நபரின் அறிகுறிகளுக்குப் பங்களிக்கக்கூடிய பிற கோளாறுகளின் குறிப்பான்களைப் பரிசோதிப்பதன் மூலம் பிற நோய் நிலைகளை விலக்க இரத்தப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
5. மூளைப் படமாக்கல்
இரத்தப் பரிசோதனைகள் பிற சாத்தியமான மருத்துவ நிலைகளை விலக்கிய பிறகு சிலநேரங்களில் மூளை ஸ்கேன் செய்யப்படுகிறது. மூளை ஸ்கேன் செய்யப்படும் போது, அந்நபரின் தலை மட்டுமே ஸ்கேன் செய்யப்படுகிறது.
இந்த மூளை ஸ்கேன்களில் காந்த அதிர்வுப் படமாக்கம் (Magnetic Resonance Imaging, MRI), கம்ப்யூட்டரைஸ்டு டோமோகிரஃபி (Computerized Tomography, CT) அல்லது பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி (Positron Emission Tomography, PET) ஸ்கேன் ஆகியவை அடங்கும்.
சிலநேரங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட மூளைப் படமாக்கல் ஸ்கேன் செய்யப்படும், இதன்மூலம் மருத்துவக் குழுவால் வெவ்வேறு மூளை ஸ்கேன்களின் முடிவுகளைப் பயன்படுத்தி அந்நபரின் அறிகுறிகளை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
இந்த வெவ்வேறு வகையான மூளை ஸ்கேன்கள், அந்நபர் அசையாமல் படுத்திருக்கும் வேளையில் ஸ்கேன் செய்யப்படும். மருத்துவர் எந்த வகையான மூளை ஸ்கேனைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து, சுமார் 30 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை எடு க்கும்.
மேலே உள்ள படத்தில், நோயாளி படமாக்கல் செய்யுமுன் படுத்துக் கொள்வார், அப்போது ஒரு சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் அவரை செய்யு தயார்படுத்துவார். MRI, CT மற்றும் PET ஸ்கேன்களை நடத்தப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அனைத்தும், மேலே படத்தில் உள்ள வெள்ளையான, வட்டமான பொருளைப் போன்று வடிவத்தில் உள்ளன.
நோயாளிக்குப் பின்வருவன உள்ளதா என்பதை நோயாளி அல்லது அவரைப் பராமரிப்பவர் மருத்துவக் குழுவுக்குத் தெரிவிக்க வேண்டும்:
- கர்ப்பமாக இருக்கிறாரா
- மூடிய இடம் பற்றிய பீதி, ஏனெனில் நோயாளியின் தலையைச் சுற்றியுள்ள இயந்திரத்தை அவர் ஒரு சிறிய, மூடப்பட்ட இடமாக உணரலாம்
- ஸ்கேனிங் இயந்திரங்கள் செயல்படும் போது அவை அவ்வப்போது தட்டும் சத்தங்களை உருவாக்கும் என்பதால், உரத்த ஒலிகளைப் பொறுத்துக்கொள்வதற்குச் சிரமமாக உணர்வது
- ஸ்கேன் செய்யும்போது போது அசையாமல் படுத்திருக்க இயலாமல் போகலாம்
நோயாளி மனப்பதற்றத்துடன் இருந்தால் மற்றும் ஸ்கேன் செய்வதற்காக அசையாமல் படுத்திருக்க முடியாவிட்டால், அவருக்கு ஒரு சிறிய அளவிலான மயக்க மருந்து கொடுக்கப்படலாம், அது ஒரு நபரை அமைதிப்படுத்தப் பயன்படும் மருந்தாகும். .
நோயாளியை ஒரு கதிரியக்கவியல் நிபுணரும் (நோய் நிலைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான மருத்துவப் படமாக்கல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்), ஒரு கதிர்வீச்சுப்பட நுட்பரும் (ஸ்கேன் செய்யும் இயந்திரங்களை இயக்குகின்ற ஒரு சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்) கவனித்துக்கொள்வார்கள்.
- MRI, CT மற்றும் PET மூளை ஸ்கேன்கள் பற்றிய தகவல்கள்
இது மூளையின் படங்களை உருவாக்குவதற்குக் காந்த அலைகளைப் பயன்படுத்துகின்ற ஒரு வலியற்ற, ஊடுருவாத வழியாகும்.
ஸ்கேனுக்காகத் தயாராதல்
விதிப்படி நோயாளிகள் MRI ஸ்கேன் அறைக்குள் உலோகப் பொருட்களை அணிந்து செல்லவோ, கொண்டு செல்லவோ அனுமதியில்லை. உலோகப் பொருளை அகற்ற முடியாவிட்டால், உடனடியாக மருத்துவக் குழுவுக்குத் தெரிவிக்க வேண்டும்.
நோயாளிக்குப் பின்வருவன உள்ளதா என்பதைப் பற்றி மருத்துவக் குழுவிடம் கூறுவது முக்கியமாகும்:
- மருத்துவ உள்வைப்புகள் (உதாரணமாக, கோக்லியர் உள்வைப்புகள், இதயம் சார்ந்த இதயமுடுக்கிகள், மூளை இரத்தக்கலன் புடைப்புக் கவ்விகள், அவர்களின் முதுகுத்தண்டு அல்லது மூட்டுகளில் உள்ள உலோக உள்வைப்புகள்)
- பச்சைக் குத்தல்கள், இதில் சிறிய அளவு உலோகங்கள் அடங்கிருக்கலாம்
நோயாளிகள் பின்வருவனவற்றை அகற்றும்படி கேட்கப்படுவார்கள்:
- துணைக்கருவிகள் மற்றும் நகைகள்
- பொய் பற்கள்
- கேட்டலுதவிச் சாதனங்கள்
- பொய் தலைமுடி (விஃகுகள்)
சிறிய அளவிலான உலோகங்களைக் கொண்டிருக்கும் ஒப்பனை, நகப் பூச்சு, வியர்வை அடக்கிகள் அல்லது சன்ஸ்கிரீன்கள் போன்ற தயாரிப்புகளை அகற்றுமாறு அல்லது அவற்றின் பயன்பாட்டைக் குறைக்குமாறு நோயாளி அறிவுறுத்தப்படுவார்.
ஸ்கேனின் போது
ஸ்கேனிங் செயல்முறை 30 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த நேரத்தில், நோயாளிகள் MRI படங்களை எடுக்க அசையாமல் படுத்திருக்க வேண்டும்.
இது மூளையின் குறுக்குவெட்டுப் படங்களை ஸ்கேன் செய்து உருவாக்குவதற்கான ஒரு வலியற்ற, ஊடுருவாத வழியாகும்.
ஸ்கேனுக்காகத் தயாராதல்
தெளிவான படங்கள் எடுக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, ஸ்கேன் செய்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு நோயாளி எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படலாம்.
கூடுதலாக, நோயாளிகள் ஸ்கேன் செய்வதுடன் குறுக்கிடக்கூடிய ஏதேனும் உலோகப் பொருட்களை அகற்ற வேண்டும்.
ஸ்கேனின் போது
CT ஸ்கேன் சுமார் 15 முதல் 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில், நோயாளிகள் அசையாமல் படுத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில நேரங்களில் அவர் மூச்சைப் பிடித்துக் கொள்ளுமாறு அல்லது மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.
இது மூளையின் படங்களை உருவாக்குகின்ற ஒரு வலியற்ற, ஊடுருவாத வழியாகும்.
ரேடியோடிரேசர் எனப்படும் பொருளால் உற்பத்தி செய்யப்படும் கதிர்வீச்சைக் கண்டறிவதன் மூலம் PET செயல்படுகிறது. ஸ்கேன் செய்வதற்கு முன் நோயாளியின் கரம் அல்லது கையில் உள்ள ஒரு நரம்புக்குள் ரேடியோடிரேசர் உட்செலுத்தப்படுகிறது.
முதுமைக்கால மறதி நோயைக் கண்டறிவதற்கான செயல்முறையில், அமிலாய்ட் மற்றும் டௌ எனப்படும் புரதங்களின் இருப்பைக் கண்டறிய PET ஸ்கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நபருக்கு ஆல்சைமர் நோய் உருவாகும் போது அமிலாய்ட் மற்றும் டவு திரட்சி ஏற்படுகிறது, இது முதுமைக்கால மறதி நோயின் மிகவும் பொதுவான காரணமாகும்.
ஸ்கேனுக்காகத் தயாராதல்
ஸ்கேன் செய்வதற்கு முன் 6 மணிநேரத்திற்குப் பட்டினி இருக்குமாறு நோயாளி அறிவுறுத்தப்படுவார், இருப்பினும் அவர் தண்ணீர் குடிக்கலாம்.
கூடுதலாக, நோயாளிகள் ஸ்கேன் செய்வதுடன் குறுக்கிடக்கூடிய ஏதேனும் உலோகப் பொருட்களை அகற்ற வேண்டும்.
ஸ்கேன் செய்வதற்கு சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்பு, நோயாளியின் கரம் அல்லது கையில் உள்ள ஒரு நரம்பினுள் ரேடியோடிரேசர் உட்செலுத்தப்படும். ரேடியோடிரேசர் உடலின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும்போது நோயாளிகள் அசையாமலும் ஓய்வாகவும் இருப்பார்கள்.
ஸ்கேனின் போது
நோயாளிக்கு ரேடியோடிரேசர் கொடுக்கப்பட்டு ஒரு மணிநேரம் கடந்த பிறகு, PET ஸ்கேன் தொடங்கும்.
PET ஸ்கேன்கள் சுமார் 30 முதல் 60 நிமிடங்கள் வரை நீடிக்கும், அப்போது நோயாளிகள் அசையாமல் படுத்திருக்க வேண்டும்.
மேலும் தகவல்கள் மற்றும் ஆதரவை எங்கே பெறுவது
நோயறிதல் செயல்முறையைத் தொடங்குவது அச்சுறுத்துவதாக இருக்கலாம், ஆனால் நோயறிதல் செய்துகொள்வது அறிகுறிகளை அனுபவிக்கும் நபரின் வாழ்க்கை மற்றும் அவரது குடும்பங்களுக்குத் தெளிவை ஏற்படுத்துகிறது. நீங்கள் விரைவில் உதவி பெற்றால், முதுமைக்கால மறதி நோய்க்கான சிகிச்சை மற்றும் ஆதரவு முன்னதாகவே தொடங்கலாம்.
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவருக்கோ முதுமைக்கால மறதி நோய் இருந்தால், ஆதரவு அல்லது தகவல்கள் தேவைப்பட்டால், ஆதரவை எவ்வாறு பெறுவது என்பது பற்றி மேலும் அறிய மக்கள்தொடர்புக் குழு (CREST)-ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது 6377 0700 என்ற டிமென்ஷியா சிங்கப்பூரின் உதவித் தொலைப்பேசி எண்ணை அழைக்கவும்.