சில நோய் நிலைகள் முதுமைக்கால மறதி நோயுடனான அறிகுறிகளைப் போல இருக்கலாம். முதுமைக்கால மறதி நோய், லேசான அறிவாற்றல் குறைபாடு, மனச்சோர்வு மற்றும் உளக்குழப்பம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
முதுமைக்கால மறதி நோய் மற்றும் இலேசான அறிவுத்திறன் குறைபாடு (Mild Cognitive Impairment, MCI)
முதுமைக்கால மறதி நோய் மற்றும் இலேசான அறிவுத்திறன் குறைபாடு ஆகியவை வெவ்வேறு நிலைமைகளாகும்.
லேசான அறிவாற்றல் குறைபாடு (Mild Cognitive Impairment, MCI) என்பது நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் உள்ளிட்ட அறிவாற்றல் திறன்களில் மிதமான ஆனால் கவனிக்கத்தக்க மற்றும் அளவிடக்கூடிய சரிவைக் கொண்ட ஒரு கோளாறு ஆகும்.
MCI-ஐக் கொண்டிருக்கும் ஒரு நபரால் இன்னும் அவரது வழக்கமான நிலையில் செயல்பட முடியும், ஆனால் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயம் அவருக்கு அதிகமாக உள்ளது.
முதுமைக்கால மறதி நோயைப் போலல்லாமல், MCI ஒரு நபரின் எளிய வழக்கமான பணிகளைச் செய்யும் அல்லது சாதாரண வாழ்க்கையை நடத்தும் திறனைப் பாதிப்பதில்லை.
இதிலிருந்து தழுவப்பட்டது: சிங்ஹெல்த்த்1
முதுமைக்கால மறதி நோய் மற்றும் மனச்சோர்வு
மனச்சோர்வு மற்றும் முதுமைக்கால மறதி நோய் இரண்டும் ஒரே மாதிரியான அறிகுறிகளான தனிமைப்படுதல், பொழுதுபோக்கில் ஆர்வம் குறைதல், சமூக விலகல் மற்றும் பற்றின்மை போன்ற அறிகுறிகளைப் கொண்டிருப்பதால், இரண்டு நோய் நிலைகளும் எளிதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். கடுமையான மனச்சோர்வு சிலநேரங்களில் சூடோடிமென்ஷியா எனப்படும் அறிவாற்றல் குறைபாடு அறிகுறிகளை ஏற்படுத்தலாம், இதனால் மனச்சோர்வுடன் தொடர்புடைய தனது உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒருவருக்குக் கடினமாகிறது.
முதுமைக்கால மறதி நோய் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் நடைபெற்று வருகிறது என்றாலும், நடு- அல்லது பிந்தைய வாழ்க்கையில் மனச்சோர்வு அறிகுறிகளைக் கொண்டிருப்பது முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான அதிக அபாயத்துடன் தொடர்பைக் கொண்டிருக்கிறது என்று பல ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.2 எனினும், மனச்சோர்வுடன் வாழ்பவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் என்ற அவசியமில்லை.
முதுமைக்கால மறதி நோய் மற்றும் மனச்சோர்வுக்கு இடையே உள்ள சில முக்கிய வேறுபாடுகள்:3
- தொடக்கம், கால அளவு மற்றும் போக்கு: முதுமைக்கால மறதி நோயின் தொடக்கம் படிப்படியான மற்றும் மீளமுடியாத சீர்கேட்டுடன் மெதுவாகவும் மறைவாகவும் இருக்கிறது; மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் இரண்டு வாரங்கள் முதல் ஆண்டுக்கணக்கில் நீடிக்கலாம், ஆனால் அவை மீளக்கூடியவை.
- மனநிலை: தொடக்க முதுமைக்கால மறதி நோயைக் கொண்டவருக்கு மனச்சோர்வடைந்த மனநிலை இருக்கலாம், ஆனால் அவருக்கு அது நிச்சயமாக இருக்கும் என்று கூற முடியாது; மனச்சோர்வை அனுபவிக்கும் ஒருவருக்கு மனச்சோர்வடைந்த மனநிலை நிச்சயமாக இருக்கும்.
- • சிந்தித்தல்: முதுமைக்கால மறதி நோயுடன், வார்த்தையைக் கண்டறிதல் மற்றும் புரிதல் ஆகியவற்றில் பெரும்பாலும் சிரமம் உள்ளது, ஆனால் மனச்சோர்வில், சிந்தனை பெரும்பாலும் அப்படியே இருக்கும், இருப்பினும் சிந்தனையின் உள்ளடக்கம் பெரும்பாலும் உதவியற்ற தன்மை மற்றும் நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டிருக்கும்.
முதுமைக்கால மறதி நோய் மற்றும் உளக்குழப்பம்
உளக்குழப்பம் என்பது மூளையில் ஏற்படும் திடீர் மாற்றத்தை குறிக்கிறது, இது ஒரு ஒருவரின் சுயஉணர்வு நிலை, உளவியக்கத் தொந்தரவுகள், நினைவுத்திறன் குறைபாடுகள், மனவுணர்வு சார்ந்த மாற்றங்கள் மற்றும் மாற்றப்பட்ட அறிவாற்றல் அல்லது கண்ணோட்டம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இவை பல மணிநேரங்களுக்கு அல்லது நாட்கணக்கில் ஏற்படுகின்றன. ஆபத்துக் காரணிகளில் உடல் ரீதியாக நோய் ஏற்படுதல், உணர்திறன் குறைபாடுகள், சமீபத்திய அறுவைச் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் அல்லது போதைமருந்துகளின் பயன்பாடு (பரிந்துரைக்கப்பட்டவை அல்லது சட்டவிரோதமானவை) ஆகியவை அடங்கும். உளக்குழப்பம் வழக்கமாக மீளக்கூடியது.
உளக்குழப்பமானது முதுமைக்கால மறதி நோயுடன் ஏற்படும் என்ற அவசியமில்லை, மேலும் முதுமைக்கால மறதி நோயை கொண்டிருக்காதவர்களுக்கும் உளக்குழப்பம் ஏற்படலாம். உளக்குழப்பம் போலல்லாமல், முதுமைக்கால மறதி நோய் பல ஆண்டுகளாக மெதுவாக வளர்ச்சியடைகிறது, சுயநினைவின் அளவில் மாற்றம் செய்வதில்லை, நிரந்தரமானது மற்றும் ஓரளவு சீரான அடையாளங்களையும் அறிகுறிகளையும் கொண்டுள்ளது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களின் நடத்தையும் கூட, தினசரி அடிப்படையில் ஓரளவிற்குச் சீரானதே.
இதிலிருந்து தழுவப்பட்டது: சாங்கி பொது மருத்துவமனை 4 மற்றும் HealthXchange.sg 5
Tell us how we can improve?
- SingHealth. (n.d.) Mild Cognitive Impairment (MCI): Signs and Symptoms. HealthXchange.sg. Retrieved on 5 March, 2021, from https://www.healthxchange.sg/seniors/ageing-concerns/mild-cognitive-impairment-signs-symptoms
- Barnes, D. E., Yaffe, K., Byers, A. L., McCormick, M., Schaefer, C., & Whitmer, R. A. (2012). Midlife vs late-life depressive symptoms and risk of dementia: Differential effects for Alzheimer disease and vascular dementia. Archives of general psychiatry, 69(5), 493-498.
- Victoria State Government. (n.d.). Differential diagnosis – depression, delirium and dementia. health.vic. Retrieved April 28, 2021, from https://www2.health.vic.gov.au/hospitals-and-health-services/patient-care/older-people/cognition/diff-diagnosis
- Changi General Hospital. (2019, January 10). Delirium: Symptoms and Management. HealthHub. https://www.healthhub.sg/a-z/diseases-and-conditions/627/delirium
- Lim, S. C. (n.d.). Dementia and Delirium: Know the Difference. HealthXchange.sg. Retrieved on 24 March, 2021, from https://www.healthxchange.sg/head-neck/brain-nervous-system/dementia-delirium-difference